1745.

     மன்னி வளரு மொற்றியுளீர்
          மடவா ரிரக்கும் வகையதுதான்
     முன்னி லொருதா வாமென்றேன்
          முத்தா வெனலே முறையென்றார்
     என்னி லிதுதா னையமென்றே
          னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார்
     அன்னி லோதி யென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      நிலையுற்று வளம்பெருகும் திருவொற்றியூரில் எழுந்தருள்பவரே, மகளிர் இரந்து கேட்கும் இயல்பாவது எண்ணுமிடத்துத் தா என ஒரு முறையாகும் என உரைத்தேன்; அது கேட்ட அவர் மூன்று முறை கேட்பது நெறி என மொழிந்தார்; எனக்கு இஃது ஐயம் தருகிறது என்று நான் சொன்னேன்; யாவர்க்கும் இது தெரிந்ததே எனக் கூறுகிறார்; இருள் நின்ற கூந்தலையுடைய தோழி, அந்த ஐயர் உரைத்த அருள் மொழிக்குப் பொருள் என்னையோ. எ.று.

     மன்னி வளர்தல் - வேரூன்றி வளர்வது போல நிலைபேறு கொண்டு பெருகுதல். மடவார் - இளமகளிர். அன்னி யோதி - அல் நில் ஓதி யெனப் பிரிந்து இருள் போல் கருமை நிறம் நிலையுறும் கூந்தல்; ஈண்டு கூந்தலையுடையவளே என நிற்கிறது. இது சில வேறுபாட்டுடன் இங்கித மாலையில் (1833) காணப்படுகிறது. உரை விளக்கம் அங்கே காண்க.

     (18)