1746. வளஞ்சே ரொற்றி யீருமது
மாலை கொடுப்பீ ரோவென்றேன்
குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன்
கொடுத்தே மென்றா ரிலையென்றேன்
உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ
ருருவு மன்றங் கருவென்றார்
அளஞ்சேர் வடிவா யென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: வளம் பொருந்திய திருவொற்றியூரை யுடையவரே,. உம்முடைய மாலையைத் தருவீரோ என்று கேட்டேனாக, இனிமைப் பண்பமைந்த சொற்களை யுடையவளே, உனக்கு அதனை முன்னமே கொடுத்துள்ளோம் என்று சொல்ல, நான் இல்லையென்று மறுத்தேன்; அஃது உன் உள்ளத்தில் உளது; அதனை நீ காண்கின்றிலை யன்றோ? காணாமைக்குக் காரணம் அஃது உருவுடைய தன்று; அருவமாகும்; என்றார். இனிமை சேர்ந்த வடிவத்தையுடைய தோழி, அந்த ஐயர் உரைத்த அருண்மொழியின் பொருள் என்னையோ, கூறுக. எ.று.
நங்கை கேட்கும் மாலை, மார்பிலணியும் மலர்மாலை. தேவர் கருதுவது வேட்கை மயக்கம். குளம் - இனிமைச் சுவை. தேவரது திருமேனிப் பொலிவு நங்கை மனத்தில் காதலுணர்வை யெழுப்பினமையின், “உனக்கு அது முன் கொடுத்தேம்” என்று கூறுகிறார். உளம் - உள்ளம். அளம் - அள்ளம்; அஃதாவது இனிமை காண்பார்க்கு அள்ளுறுவிக்கும் வடிவம் “அளம் சேர் வடிவு” எனப்படுகிறது; “அள்ளுடை அமுதம்” (சீவக. 1191) என்பது போல. இதுவும் சில வேறுபாடுற்று இங்கித மாலையிற் (1834) காணப்படுகிறது. மால் -மயக்கம். (19)
|