1747.

     வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர்
          விளங்கு மதனன் மென்மலரே
     மாற்றா ரென்றே னிலைகாணெம்
          மாலை முடிமேற் காணென்றார்
     சாற்றுச் சலமே யீதென்றேன்
          சடையின் முடிமே லன்றென்றார்
     ஆற்றா விடையா யென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      வீறு கொண்டு திருவொற்றியூரில் எழுந்தருளும் தேவரே, விளங்குகின்ற மன்மதன் விடுக்கும் அம்புகளாகிய மலர்களே மயக்கம் விளைவிக்கும் மாலையாம் என்றேனாக, இல்லை; எம்முடைய முடிமேல் உளது காண் என்று கூறினார்; முடிமேல் உள்ள இது வாய்பேசாத நீராகிய கங்கை என்று நான் சொல்ல, அது சடையில் உளது; முடிக்கண் இல்லை என மொழிந்தார்; மெலியும் இடையையுடைய தோழி, அந்த ஐயர் உரைத்த அருள் மொழியின் பொருள் என்னையோ. எ.று.

      மாற்றார் - மால் விளைவிக்கும் தார்; திருமாலினுடைய மாலையுமாம். மதனன் மாலை வேட்கை மயக்கம் தருவதென்ற கருத்தால் மாற்றார் என்றாளாக, அதனைத் திருமால் மாலையெனக் கொண்டு, திருமால் மாலையென்று எமது மாலை என்பாராய், “இல்லை எம்மாலை; முடிமேல் காண்” என்று தேவர் கூறுகின்றார்; சாற்றாச் சலம் - பேசா மடந்தையாகிய கங்கை. கங்கை என்று நங்கை சொல்லுகிறாள்; அவட்குக் கங்கை சடையில் இருப்பது; முடிமேல் அன்று என்பாராய், “சடையில்; முடிமேல் அன்று” என வுரைக்கின்றார். ஆற்றா இடை - கொங்கைச் சுமை தாங்காமல் மெலியும் இடை. இதுவும் சில வேறுபாட்டுடன் இங்கித மாலையில் (1835) காணப்படுகிறது.

     (20)