1748.

     புயப்பா லொற்றி யீரச்சம்
          போமோ வென்றெ னாமென்றார்
     வயப்பா வலருக் கிறையானீர்
          வஞ்சிப் பாவிங் குரைப்பதென்றேன்
     வியப்பா நகையப் பாவெனும்பா
          வெண்பா கலிப்பா வுடனென்றார்
     அயப்பா லிடையா யென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      செல்வமிகும் நிலப்பகுதியாகிய திருவொற்றியூரில் உள்ள தேவரே, என் மனத்தின்கண் உள்ள அச்சம் போகுமோ என்று கேட்டேனாக, ஆம் என்று விடை கூறினார்; அதுகேட்டு, வெற்றி மிக்க பாவலர்களான ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கட்குத் தலைவரானவரே, நீர் எனக்கு உரைப்பது வஞ்சித்தலாகுமோ என வினாவினேன்; அதற்கு நான் உரைப்பதை வஞ்சிப்பா என்பது எனக்கு வியப்பாக வுளது; ஆ, நகையப்பா என்றால் ஆசிரியப்பா என்றாகும்; பின்பு வெண்பா, கலிப்பா என்பன உடன் வரும் என்று சொன்னார்; ஐயத்துக்குரியதாகிய இடையையுடைய தோழி, அவ்வைய ருரைத்த அருள் மொழிக்குப் பொருள் என்னையோ. எ.று.

     இதுவும் சிறிது வேறுபட்டு இங்கித மாலையில் (1836) காணப்படுகிறது.

     (21)