1749.

     தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர்
          சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
     திண்ணம் பலமேல் வருங்கையிற்
          சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
     வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன்
          வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார்
     அண்ணஞ் சுகமே யென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      தண்ணிய சோலைகள் சூழ்ந்த ஒற்றியூரில் எழுந்தருளும் தேவரே! கழன்றோடும் என் வளைகளைக் கையிற் பொருந்தச் செய்யும் என்று கேட்டேனாக, திண்ணமாகப் பல என்னும் சொன் மேல் வருதற்குரிய கையென்னும் எழுத்தை முன்னமே சேர்த்துப் பல கையாக்கி விட்டோம்; தெரிந்துகொள் என்று சொன்னார். அது கேட்டு, இந்தச் சொல்லுக்குத் தன்மை பலவாக இருக்கிறது என்று நான் சொல்ல இத் தமிழ் மொழிக்கு வண்ணம் பல உண்டென்றதாகக் கொண்டு, வாய்ந்த சான்று ஒன்றை எனக்குக் காட்டுக என்று சொன்னார்; நெருங்கிப் பயிலும் கிளி போன்ற தோழியே, இந்த ஐயர் சொன்ன அருள் மொழிக்குப் பொருள்தான் என்னையோ கூறுக. எ.று.

     சங்கம் - சங்கினாற் செய்யப்பட்ட வளை. சங்கு அங்கையிற் சேர்த்திடும் என்று கொண்டு, அங்கையில் சங்க முத்திரை யிருப்பதால் உமக்கு வெற்றியெய்தும் எனப் பொருள் உரைப்பினும் அமையும். திண்ணம் - உறுதி. இம்மொழிக்கு என்றதை, இத்தமிழ் மொழிக்கு என்று கொண்டு தமிழ்ச் செய்யுளியலில் காணப்படும் பல்வகை வண்ணங்களைக் குறித்துரைப்பதாகத் தேவர் கருதிக் கொண்டு, அவ்வண்ணங்களில் ஒன்றே எடுத்துக் காட்டுக என்பாராய், “வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார்” என நங்கை நவில்கின்றாள். அஞ்சுகம் - கிளி. கையிலும் தோளிலும் இருந்து பயில்வது பற்றிக் கிளியை, “அண்ணஞ்சுகம்” என உரைக்கின்றார். அஞ்சுகம் போல்பவளை “அஞ்சுகமே” எனப் புகல்கின்றார். அண்ணுதல் - நெருங்குதல். இனிமைப் பொருட்டாகிய அண்ணித்தல் எனினுமாம்.

     இப்பாட்டு சில வேறுபாடுகளுடன் இங்கித மாலையிற் (1837) காணப்படுகிறது. “எண்ணித் தம்மை நினைந்திருந்தேனுக்கு, அண்ணித்திட் டமுதூறு மென்நாவுக்கே”(வெண்ணி) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.

     (22)