175.

    மேலை வானவர் வேண்டும் நின்றிருக்
    காலை யென்சிரம் களிக்க வைப்பையோ
    சாலை யோங்கிய தணிகை வெற்பனே
    வேலை யேந்துகை விமல வேதனே.

உரை:

     சோலைகள் மிக்குள்ள தணிகை மலைப் பரமனே, வேற் படையை யேந்தும் கையையுடைய தூய வேதத்தலைவனே, மேலுலகத்துத் தேவர்கள் விரும்பி வழிபடும் நின்னுடைய திருவடியை என் மனம் மகிழும்படி எனது தலைமேல் வைத்தருள்வாயோ, கூறுக. எ. று.

     சாலை - சோலை. காஞ்சிப்பதி கண்டு வேங்கடம் காணச் செல்லும் பெருவழிச் சாலை தணிகை மலையைச் சார்ந்து போதலால், “சாலை யோங்கிய தணிகை வெற்பு” என்கின்றார் என்றுமாம். வேல்-வேற்படை. வேலும் வில்லும் முதலிய படையேந்தும் கை தூய வெனப் படாவாயினும், முருகன் திருக்கை தூய்மையே யுருவாயது பற்றி, “வேலை யேந்துகை விமல வேதனே” என விளம்புகின்றார். வேதத்தின் முடிபொருளை யுரைத்தருளிய முதல்வனாதலால் “விமல வேதனே” என்று கூறுகின்றார். அந்தாதித் தொடை யமைதி நோக்காது ஏடெழுதினோரால் விமலநாதன் எனப் பாடம் திரிக்கப் பட்டுள்ளது. மேலை யுலகத்துத் தேவர்கள் பலரும் முப்போதும் முருகன் திருவடியை விரும்பி வணங்கிய வண்ணமிருத்தலால், “மேலை வானவர் வேண்டும் நின் திருக்கால்” என்று புகழ்கின்றார். இறைவன் திருவடியை முடிமேற் சூடப் பெறுவது மிக்க பெரும் திருவருட் பேறு எனப் பெரியோர் விரும்பி வேண்டுவராதலால், “நின் திருக்காலை என் சிரம் வைப்பையோ” என்றும், அதனால் பேரின்பம் உண்டாவது விளங்கக் “களிக்க” என்றும் உரைக்கின்றார்.

     இதனால் திருவடியின் பெருமை யுரைத்து அதனை என்முடி மேல் வைத்தருள்க என்று வேண்டுமாறு காணலாம்.

     (25)