1750. உகஞ்சே ரொற்றி யூருடையீ
ரொருமா தவரோ நீரென்றேன்
முகஞ்சேர் வடிவே லிரண்டுடையார்
மும்மா தவர்நா மென்றுரைத்தார்
சுகஞ்சேர்ந் தனவும் மொழிக்கென்றேன்
றோகா யுனது மொழிக்கென்றார்
அகஞ்சேர் விழியா யென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: தலைமை பொருந்திய திருவொற்றியூரை யுடையவரே! நீவிர் ஒருவராகிய மாதவரோ என்று கேட்டேனாக, முகத்தின்கண் கூரிய வேல் போன்ற இரண்டு கண்களையுடையவளே, மூவராகிய மாதவர் நாம் என்றுரைத்தார். அது கேட்டு உமது மொழிக்கு எனது உள்ளத்தில் இன்ப நினைவுகள் தோன்றுகின்றன என்றேனாக, மயில் போன்றவளே, உனது மொழிக்கே கிளிகள் வந்தணையும் என்று கூறுகின்றார். அகநினைவுகளை யுணரும் பார்வையையுடைய தோழி, அந்த ஐயர் அருண் மொழிக்குப் பொருள் என்னையோ! எ.று.
மாதவர் - பெரிய தவத்தை யுடையவர்; மாதினை யுடையவர் என்றும் பொருள்படும், மும்மாதவர், பிரமன், திருமால், சிவன் எனும் மூவர். “படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகளாயினை” (எழுகூற்) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. மூவராகிய பெண்கள் எனினுமமையும். ஒரு மாதவரோ என்று கேட்டாட்கு, மும்மடங்கு மாதவ முடையேன் என்றா ரெனினுமாம். அகஞ்சேர் விழி - கண் வழியாக மனநினைவுகளைப் பார்க்கும் விழி. “அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்” (திருமந். 2944) என்பர் திருமூலர்.
சில வேறுபாடுகளுடன் இப்பாட்டு இங்கித மாலையிற் (1838) காணப்படுகிறது. (23)
|