1751. ஊரா மொற்றி யீராசை
யுடையே னென்றே னெமக்கலது
நேரா வழக்குத் தொடுக்கின்றாய்
நினக்கே தென்றார் நீரெனக்குச்
சேரா வணமீ தென்றேன்முன்
சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
ஆரா ரென்றா ரென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: ஊர் என்று சிறப்பிக்கப்படும் திருவொற்றியூரை யுடையவரே. நும் மேல் ஆசை யுடையேன் என்று நான் சொன்னேனாக, அவர் எமக்கன்றி ஆசையாகிய ஆடை நுமக்கேது என்றும், நான் கேட்பது பொருந்தா வல்வழக்கு என்றும் கூறுகின்றார். இது நீர் சேரா வண்ணம் விலகுதற்கு அமைவதாம் என்று நான் சொல்ல, என் சொல்லைச் சேர்தற்குரிய ஆவணம் என்று கொண்டு, நானல்லவே, உனக்கு எழுதித் தந்தவர் யாவர் என்று கேட்கிறார். அவர் உரைத்த அருள் மொழிக்கு பொருள்தான் என்னையோ? எ.று.
ஆவணம் - ஓலை. நேரா வழக்கு - வல்வழக்கு. இதுவும், சில வேறுபாடுகளுடன் இங்கித மாலையிற் (1839) காணப்படுகிறது. (24)
|