1752. வருத்தந் தவரீ ரொற்றியுளீர்
மனத்த காத முண்டென்றேன்
நிருத்தந் தருநம் மடியாரை
நினைக்கின் றோரைக் கண்டதுதன்
றிருத்தந் தருமுன் னெழுத்திலக்கஞ்
சேருந் தூர மோடுமென்றார்
அருத்தந் தெரியே னென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள தேவரே, என் மனவருத்தத்தைப் போக்காது ஒழிகின்றீராதலால், உங்கள் மனத்தில் என்மேல் அகாதம் உளது போலும் என்று நினைக்கின்றேன் என்று சொன்னேனாக, நிருத்தம் புரியும் நம் அடியார்களை, எம்மைப் போலவே நினைக்கின்ற சான்றோர்களைக் கண்டால் அந்த அகாதம் திருத்த மெய்தி எண்காத தூரம் விலகியோடும் என்று கூறுகின்றார். அந்தத் தேவர் மொழிந்தவற்றிற்குப் பொருள் தெரியேன்; அதன் பொருள்தான் என்னையோ? எ.று.
அகாதம் - வெறுப்பு; சினமுமாம். நிருத்தம் - கூத்து. சிவனடியார்களைச் சிவன் எனவே நினைந்து வழிபடல் சிவநெறியாகும். “புவனியிற் சேவடி தீண்டினன் காண்க; சிவனென யானுந் தேறினன் காணக்” (அண்ட) எனத் திருவாசகமும், “நேயம் மலிந்தவர் வேடமும், ஆலயந்தானும் அரனெனத் தொழுமே” எனச் சிவஞான போதமும் செப்புவது உணக்க.
இதுவும் சில வேறுபாடுகளுடன் இங்கித மாலையில் (1840) காணப்படுகிறது. (25)
|