1753. மைய லகற்றீ ரொற்றீயுளீர்
வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
துய்ய வதன்மேற் றலைவைத்துச்
சொன்னாற் சொல்வே மிரண்டென்றார்
உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே
னுலகி லெவர்க்கு மாமென்றார்
ஐய விடையா யென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: திருவொற்றியூரிலுள்ள பிச்சைத் தேவரே, எனது வேட்கை மயக்கத்தைப் போக்குதற்கு வாவென் றுரைப்பீரோ வென்று கேட்டேனாக, தூய அச்சொல்லின் மேல்தலை என்பதை வைத்து தலைவா என்று சொன்னால், இருமுறை அதனைச் சொல்லுவேன் என்கின்றார். அது கேட்டு யான் உய்யும் வண்ணம் இச்சொல்லை எனக்கு மொழிந்தீர் என்று சொல்லி மகழ்ந்தேனாக, உனக்கு மாத்திரமன்று; இச்சொல் உலகில் எவர்க்கும் பொருந்தும் என்று உரைத்தார்; நுண்ணிய இடையையுடையவளாகிய என் தோழி, இத்தேவர் சொன்ன அருள் மொழிக்கும் பொருள் என்னையோ! எ.று.
வா என்னுஞ் சொல் அன்பால் ஒருவரை அழைக்கும் இன்சொல்லாதலின், “துய்ய அது” வென்று சிறப்பிக்கின்றார். தூய வென்பது துய்ய வென வந்தது. வா என்பதன் மேல் தலை என்ற சொல்லைப் பெய்தால் தலைவா என வருதலின், “அதன் மேல் தலை வைத்துச் சொன்னால்” என்று சொல்கின்றார். தலைவா வாவென்று சொன்னால் வாவா என இருமுறை சொல்லுவேம் என்பாராய்ச், “சொல்வேம் இரண்டு” என்றார். இருவா என்று கொண்டு, வா இரு என மாற்றி யுரைப்பினு மமையும். மையலுற்று மயங்குவார்க்கு இச்சொல் இன்பந் தருதலின், “எனக்கு உய்ய உரைத்தீர்” என்று இசைக்கின்றாள். தலைவா என்றால் யாவரும் மகிழ்ந்து வா வென்பராதலின், “உலகில் எவர்க்கும் ஆம்” என்று சொல்கின்றார். ஐய இடை - நுண்ணிய இடை.
இது சில வேறுபாட்டுடன் இங்கித மாலையில் (1841) காணப்படுகிறது. (26)
|