1755.

     வயலா ரொற்றி மேவுபிடி
          வாதர் நும்பே ரியாதென்றேன்
     இயலா யிட்ட நாமமதற்
          கிளைய நாம மேயென்றார்
     செயலார் கால மறிந்தென்னைச்
          சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
     கயலா ரென்றா ரென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      நன்செய் வயல்கள் நிறைந்த திருவொற்றியூரில் எழுந்தருளும் பிடிவாதக்காரரான பிச்சைத் தேவரை, உம்முடைய பெயர் யாது என்று கேட்டேனாக, இயற்பெயராக எனக்கிட்ட பெயர்க்குப் பின் தோன்றியது இளமைப் பருவம் குறிக்கும் பெயராகும் என வுரைத்தார்; அது கேட்டுச் செயற்குரிய காலமறிந்து என்னைக் கூடுவீராக என வேண்டினேன்; இங்கே உனக்கு அயலாக யாவர் இருக்கின்றார்கள் என்று கூறினார்; அவ்வையர் கூறிய அருள் மொழிக்குப் பொருள் என்னையோ. எ.று.

     பிடிவாதர் - பிடிவாதம் செய்பவர்; தொடக்க முதல் பிடித்த கொள்கையை விடாது வாதம் செய்பவர். பிடி யானையின் நடை யுடையராதல் பற்றி மகளிரைப் பிடி என்பர். பிடி போல்பவளைப் பிடி என்பது வழக்கு. பிடி போன்ற காளியோடு வாதம் புரிந்தமைபற்றிச் பிச்சைத் தேவரைப் பிடிவாதர் என்று கூறுகின்றாளுமாம். “கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவ நின்று நடமாடி” (ஐயாறு) என ஞானசம்பந்தரும், “ஆடினார் பெருங்கூத்துக் காளி காண” (பாசூர்) என நாவுக்கரசரும், “கொதியினால் வருகாளிதன் கோபம் குறைய ஆடிய கூத்துடையான்” (ஆவடு) என நம்பியாரூரரும் ஒப்ப வோதுதல் காண்க. காரணம் காணாது இடும் பெயர், இயற்பெயர்; காரணம் பற்றி வருவன காரணப் பெயர்; அது பின்னர் வருதல் பற்றி, “இளைய நாமம்” என்று உரைக்கின்றார். திருமணக் கோலத்தில் அழகு திகழ்வது கண்டு சான்றோர் வழங்குவது கலியாண சுந்தரர், சுந்தரர், சொக்கர் என்பனவாகும். செயலார் காலம் - செயல் படுதற் கேற்ற காலம். கால மறிந்து என்னைக் கூடுவீராக என்றாட்கு, அறியாமைக்கு நகைத்துக் காலமறிதல் மாத்திரம் அறிதல் அமையாது; இடமறிதல் வேண்டும் என்பாராய், இங்கே அயல் ஆர் இருக்கின்றார்கள்; அயலானார் யாவர் இருக்கின்றார்கள்; அறிந்துரைப்பாயாக என்பார், “அயலார்” என்று கூறுகிறார். இது சில வேறுபாட்டுடன் இங்கித மாலையில் (1844) காணப்படுகிறது.

     (28)