1756. என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ
ரென்னை யணைய நினைவீரேற்
பொன்மேல் வெள்ளி யாமென்றேன்
பொன்மேற் பச்சை யறியென்றார்
மின்மேற் சடையீ ரீதெல்லாம்
விளையாட் டென்றே னன்றென்றார்
அன்மேற் குழலா யென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: திருவொற்றியூரில் உள்ள தேவரே, என் மேல் அருள் கொண்டு என்னை மணந்து கொள்ளத் திருவுள்ளம் கொள்வீராயின், என்னிடமுள்ள பொன் னாபரணங்கட்கு மேலும் வெள்ளிப் பாத்திரங்கள் சீராகப் பெறுவீர் என்றேனாக, பொன்னினும் மேலாயது மரகத மணி யென்று சொன்னார். மின்னுக்கு மேம்பட்ட ஒளியும் நிறமுமுடைய சடையை யுடையவரே. இவ்வுரையாடல் ஒருவகை விளையாட்டுத் தான் என்றேன்; அவரும் தீது விளையாமையால் நல்லது தான் என்று சொன்னார்; இருளின் மிக்க கரிய கூந்தலையுடைய தோழி, இந்த ஐயர் சொன்ன அருள் மொழிக்குப் பொருள் என்னையோ. எ.று.
என் மேல் உள்ள அருளால் திருவொற்றியூரில் எழுந்தருளும் தேவரே எனினும் அமையும். பொன் வியாழனுக்குப் பெயராகலின், அதற்கு மேல் வரும் கிழமை வெள்ளி என்றதாம். வேட்கையாற் பொன்போற் பசந்த என்கண் வெள்ளியதாம் என்றாட்குப் பொன்னிறம் மாறி மேனி பசுமை எய்தும் என்றாருமாம். “கொன்றைப் பூவின் பசந்த வுண்கண்” (ஐங். 500) என்பது காண்க. இதுவும் சில வேறுபாட்டுடன் இங்கித மாலையில் (1843) காணப்படுகிறது. (29)
|