1757. நாலா ரணஞ்சு ழொற்றியுளீர்
நாகம் வாங்கி யென்னென்றேன்
காலாங் கிரண்டிற் கட்டவென்றார்
கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
வேலார் விழிமாத் தோலோடு
வியாளத் தோலு முண்டென்றார்
ஆலார் களத்த ரென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: நால்வகை வேதங்களும் சூழ்ந்து ஓதப்படும் திருவொற்றியூரிலுள்ள தேவரே, பாம்பை வாங்குவது யாது கருதி என்று கேட்டேனாக, கால் இரண்டு கூட வரும் அறையிற் கட்டிக் கொள்ள என்று சொன்னார்; நீவிர் மான் தோலை இடையிற் கொள்ள வல்லவராயிற்றே என்று சொன்னேன்; வேல் போன்ற விழிகளை யுடையவளே, மான்றோலுடன் யானையின் தோலும் புலித்தோலும் எமக்கு உண்டு என்று கூறினார்; விடம் தங்கிய கழுத்தையுடைய அவ்வையர் கூறிய அருள் மொழிக்குப் பொருள் என்னையோ. எ.று.
நாகம் - பாம்பையும் பொன்மலையையும் குறிக்கும். வில்லின் இருதலையும் கால் எனப்படுதலின், இருகாலையும் பாம்பாகிய நாணைக் கொண்டு கட்டுதற்கு என, நாகம் வாங்கி யென்னென்று வினாவினாட்கு விடை கூறுகின்றார் என்றும் உரைக்கப்படும். கால் ஆங்கு இரண்டிற் கட்ட என்பதற்குப் பாம்பு போல இரேசக பூரகப் பிராணாயாமம் செய்தற்கு என்றலும் ஒன்று. இதுவும் சில வேறுபாட்டுடன் இங்கித மாலையிற் (1845) காணப்படுகிறது. (30)
|