1758.

     முடியா வளஞ்சூ ழொற்றியுளீர்
          முடிமே லிருந்த தென்னென்றேன்
     கடியா வுள்ளங் கையின்முதலை
          கடித்த தென்றார் கமலமென
     வடிவார் கரத்தி லென்னென்றேன்
          வரைந்த வதனீ றற்றதென்றார்
     அடியார்க் கெளியா ரென்னடியவ்
          வையர் மொழிந்த வருண்மொழியே.

உரை:

      கெடாத வளம் பொருந்திய திருவொற்றியூரிலுள்ள பிச்சைத் தேவரே, உமது முடிமே லிருப்பது யாதென்று கேட்டேனாக, கடிக்க முடியாத உள்ளங் கையை முதலை கடித்தது என்று கூறினார். தாமரை மலர் போலும் கையில் இருப்பது என்னவோ என்று மேலும் வினாவினேன்; நீக்கிய அதன் ஈற்றெழுத்துக் கெட்டது என மொழிந்தார்; அடியார்க்கு எளியராகிய அந்த ஐயர் உரைத்த அருண்மொழியின் பொருள் என்னையோ. எ.று.

     முடியா வளம் என்பதில் முடிதல், கெடுதல். முடி - சடைமுடி; உள்ளங்கையைக் கடிக்க முடியாமை பற்றி, கடியா வுள்ளங்கை எனவும், கடிக்க முடியாத அதனை முதலை கடித்தது என்பதும் ஒரு நயம். வடியார் கரம் - அழகு பொருந்திய கை. அடியாரிடத்து மிகவும் எளியராய் ஒழுகுவது கொண்டு சிவனை அடியார்க்கு எளியர்” என்று கூறுவர் “எளியவர் அடியார்க் கென்னும் இன்னம்பர் ஈசனாரே” (இன்னம்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. இதுவும் சில வேறுபாட்டுடன் இங்கித மாலையில் (1846) காணப்படுகிறது. உரை விளக்கம் ஆண்டுக் காண்க.

     (31)