176.

    வேத மாமுடி விளங்கு நின்றிருப்
    பாத மேத்திடாப் பாவியேன் றனக்
    கீதலின்று போ வென்னி லென்செய்கேன்
    சாதல் போக்கு நற்றணிகை நேயனே.

உரை:

     சாதற் றுன்பத்தைப் போக்கி யருளும் நல்ல தணிகைப் பதியில் விரும்பி யிருப்பவனே, வேதத்தின் உச்சியில் திகழும் நின்னுடைய திருவடியை வணங்கி வழிபடாத பாவியாகிய எனக்குத் திருவருளை ஈவதில்லை, நி போ என்று சொல்வாயாயின், யான் என்ன செய்வேன், எ. று.

     சாதல் - பிறந்து பிறந்து இறத்தல். பிறப்பிறப் பகற்றும் பெருமான் என்றற்குச் “சாதல் போக்கும் நற்றணிகை நேயன்” என்று பரவுகின்றார். நேயன், ஈண்டு விரும்புவன் என்னும் பொருளது. வேதக் காட்சிக்கு மேலே தோன்றுவது பற்றி, “வேத மாமுடி விளங்கும் நின் திருப்பாதம்” என்றும், கீழுள்ள வேதங்களாலும் காணப்படாமை தோன்ற “மாமுடி” என்றும் இயம்புகின்றார். பணிந்து ஏத்தக் கடவதாகிய திருவடியை ஏத்தாமை பாவமாதல் தோன்றத் “திருப்பாதம் ஏத்திடாப் பாவியேன்” எனவும், அக்குற்றத்தால் திருவருட் பேற்றுக்கு உரிமை யில்லாமை காட்டி, “ஈதல் இன்று போ என்னில்” எனவும், ஈயாது மறுத்த வழி வேறு யாதும் செய்யமாட்டாமை புலப்பட, “என் செய்கேன்” எனவும் கூறுகின்றார்.

     இதனால், திருவருட் பேறு மறுக்கப் படின் வேறு யாதும் செய்ய மாட்டாமை கூறி முறையிட்டவாறாம்.

     (26)