1764. கலையா ளுடையீ ரொற்றிநின்றீர்
காம மளித்தீர் களித்தணையீர்
மலையா ளுமது மனைவியென்றேன்
மலைவா ளுனைநான் மருவினென்றார்
அலையாண் மற்றை யவளென்றே
னலைவா ளவளு மறியென்றார்
நிலையாண் மையினீ ராவென்றே
னீயா வென்று நின்றாரே.
உரை: பல்வகைக் கலைகளை யாள்பவராய்த் திருவொற்றியூரின் கண் நின்று அருளும் பிச்சைத் தேவரே, காம வேட்கையைப் படைத்தளித்தவர் நீரேயாதலின் எம்மை உவந்து அணைத்தருள்க; உமக்கு மனைவியாயவள் மலைமகளன்றோ என்று கேட்டேனாக, உன்னை நான் கூடுவேனாயின் என்னோடும் உன்னோடும் பிணங்குவாள் என்று சொன்னார்; மற்றையவளான அலைமகள் வருந்த மாட்டாள் என்று சொன்னேன்; அவளும் அலைப்பாள் என அறிக என்று உரைத்தார்; இருவரையும் மகிழ்விக்கும் நிலைத்த ஆண்மை யுடையீர்; ஆ என வியந்தேனாக, நின் வேட்கையை நீக்குவாயாக என்று சொல்லி எதிரே நின்றார். எ.று.
பல்வகைக் கலைகளின் உருவாயவனாதலால் “கலையாளுடையீர்” என்று கூறுகிறாள். “கலையாகிய கலைஞானம் தானேயாகி. . . . . . . . . நின்றவாறே” (நின்ற) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. காமம் அளித்தீர் - காம வேட்கையை என்னுள் எழுவித்தீர் என்றுமாம். மலையாள் - மலைமகளான உமாதேவி. மலைதல் - பிணங்குதல்; பொருதலுமாம். மலையாளாயினும் மருவின் மலைவாள் என்பதாம். அலையாள் - அலைகளையுடைய கங்கை. அலைத்தல் - வருத்துதல். நீங்காது கூடியிருத்தலால் “நீவிர் நிலை யாண்மையினீர்” என்று உரைக்கின்றாள். நீயல் - நீங்குதல். “நல்ல சொல்லி மணந்தினி நீயேன் என்ற தெவன் கொல்” (ஐங். 22) நீயாய் எனக்கொண்டு நீயாய் ஆகுவை என்றாரென்றுமாம்; யாய் - தாய். இதுவும் இங்கித மாலையிற் (1854) காணப்படுகிறது. (6)
|