1765. சீலம் படைத்தீர் திருவொற்றித்
தீயாக ரேநீர் திண்மைமிகுஞ்
சூலம் படைத்தீ ரென்னென்றேன்
றொல்லை யுலக முணவென்றார்
ஆலம் படுத்த களத்தீரென்
றறைந்தே னவளிவ் வானென்றார்
சாலம் பெடுத்தீ ருமையென்றேன்
றார மிரண்டா மென்றாரே.
உரை: ஒழுக்க நெறியைப் படைத்தவராகிய திருவொற்றியூர்த் தியாகப் பெருமானே, நீர் திண்மை மிக்க சூலப்படையை ஏன் கொண்டீர் என்று வினவிய போது, பழமையாகிய உலகம் உண்பன வுண்டு வாழ்தற்கென்று சொன்னார்; விடம் பொருந்திய கழுத்தை யுடையராவீர் என்று யான் சொல்ல, அவள் இந்த ஆனேறு என மொழிந்தார்; உமையுடன் மிக்க அம்பினைச் சுமந்தீரே என்றேனாக, எனக்குத் தாரமாயினார் இருவர் என்று உரைக்கின்றார்; இவர் கூற்று இருந்தவாறு என்னே. எ.று.
பொறி புலன்களை அடக்கியொழுகும் நன்னெறி யுரைத்தவராதலின், “சீலம் படைத்தீர்” என்று கூறுகிறாள். திண்மை - வலிமை. உலகில் இருந்து உயிர்கள் உலக போகத்தை யுண்டு கழித்தல் வேண்டி நமனைச் சூலப் படையால் நெறிப்படுத்தினமை பற்றி “உலகம் உண” என்று இயம்புகின்றார். ஆலம் - கடல் நஞ்சு. படுத்தலாவது, அதன் கொல்லும் தன்மையைக் கெடுத்தல். களம் - கழுத்து. களத்தீர் என்பது மனைவியையுடையீர் என்று பொருள்படுவதால், ஆலம் படுத்த களம், ஆலிலையிற் படுத்த திருமாலாகிய மனைவி யெனக் கொண்டு, திருமாலே விடையுருவானது பற்றி, “அவள் இவ்வான்” என வுரைக்கின்றார். திருமாலை வன்மை மிக்க அம்பாக கொண்டிரன்றோ என்ற கருத்தால் “சாம் அம்பு எடுத்தீர்” எனக் கேட்டாளாதலைக் கண்டு, நிறைந்த நீராகிய கங்கையும் உமையுமாகிய இருவரும் எனக்கு மனைவி என்பாராய்த் “தாரம் இரண்டாம்” என மொழிகின்றார். சூலம் படைத்தீ ரென்றதற்குச் சூல் அம்பு எனக் கொண்டு இந்திரன் விடுப்ப வந்த நீர் நிறைந்த கார் மேகத்தைத் தடுத்த திருவிளையாடலைக் கருதுவாரு முண்டு. இது சில வேறுபாட்டுடன் இங்கித மாலையிற் (1855) காணப்படுகிறது. (7)
|