1766. ஞால ராதி வணங்குமொற்றி
நாதர் நீரே நாட்டமுறும்
பால ராமென் றுரைத்தேனாம்
பால ரலநீ பாரென்றார்
மேல ராவந் திடுமென்றேன்
விளம்பேல் மகவு மறியுமென்றார்
கோல ராமென் றுரைத்தேன்யாங்
கொண்டோ முக்க ணென்றாரே.
உரை: நிலவுலக மக்கள் முதலாக யாவரும் வணங்கும் திருவொற்றியூர்த் தலைவரே, நீவிர் தாம் கண் பொருந்திய நெற்றியை யுடையவரென நான் உரைத்தேனாக, நாம் பாலரல்லர்; இதனை நீயே பார்த்துக்கொள் என்று கூறினார்; உமது மேனிமேற் கிடக்கும் பாம்பு என் மேல் வரும் என்றேனாக, மகளிர் மேலராய் வருக என்றதாகக் கொண்டு, வாயாற் சொல்லாதே, உன் சொற்பொருளைச் சிறு குழவியும் அறியும் என்று சொன்னார்; நீர் மிக்க அழகுடையவர் என்று மொழிந்தேன்; அது கேட்டுக் கோலூன்றும் முதியவர் எனக் கொண்டு யாம் கோலராக வேண்டா, எமக்கு மூன்று கண்கள் உண்டு என இசைக்கின்றார். எ.று.
ஞாலம் நில வுலகமாதலின், ஞாலர் என்பது நிலவுலக மக்கட்காயிற்று. நாட்டம் - கண். பாலம் நெறியாதலால், பாலர் நெற்றியை யுடையவர் எனப் பொருள்படுகிறது. பாலர் - சிறுவர். மேலர் - மகளிர் மேற் காமக் கருத்துடையவர். “பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளும்” (கொண்டீர்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. கோலர் - அழகர்; கோலூன்றும் முதியவர். இது சில வேறுபாட்டுடன் இங்கித மாலையிற் (1856) காணப்படுகிறது. (8)
|