1768.

     ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ
          ரொற்றி யுடையீ ருவப்புடனே
     யென்னா குலத்தை யோட்டுமென்றே
          னிடைய ரலநா மென்றுரைத்தார்
     பொன்னாற் சடையீ ரென்றேனென்
          புதிய தேவி மனைவியென்றார்
     சொன்னாற் கேள்வி வியப்பென்றேன்
          சுத்த வியப்பொன் றென்றாரே.

உரை:

      அசுராகிய திரிபுரப் பகைவருடைய மூன்று மதில்களையும் எரித்தழித்த நீவிர் திருவொற்றியூரையுடைய தேவர்; நீர் மகிழ்ச்சியுடன் என் வருத்தத்தைப் போக்குக என வேண்டினேனாக, நாம் இடையரினத்தவ ரல்ல உனது ஆகுலத்தை ஓட்டுதற்கு என வுரைத்தார்; பொன்னிறம் தங்கிய சடையை யுடையவர் நீர் என்று சொன்னேன்; பொன் மகளல்ல, கங்கையாகிய புதிய தேவி எனக்கு மனைவியென்று கூறினார்; நமது கேள்வியும் வியப்புந் தருவதாகும் என்று சொன்னேனாக, சுத்த வியப்பாம் என மொழிந்தார். எ.று.

     ஒன்னார் - பகைவர். ஆகுலம் - வருத்தம்; ஆனினம் என்று வரும். தன் வருத்தத்தைப் போக்குதல் வேண்டும் என்றற்கு ஆகுலத்தை ஓட்டும் என்றமையின், தேவர் ஆனினம் எனக் கொண்டு ஆவினத்தை யோட்டுவோர் இடையராதல் பற்றி, “இடையர் அல நாம்” என்று சொல்லுகிறார். பொன்னிறம் உடைமையால் சடையைப் பொன்னார் சடை என நங்கை கூறலும், பொன் திருமகட்குப் பெயராதலால், திருமகள் தங்கும் சடையென்று கொண்டு, சடையில் இருப்பவள் கங்கையாகிய தேவி; அவள் எனக்கு மனைவி எனத் தொடர்பும் உரைக்கின்றார். வியப்பு, தொல்காப்பியத்தில் மருட்கை எனப்படும். இது, “புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்” என்று நான்கின் அடியாகத் தோன்றும். நங்கையின் கேள்வி நான்கின் அடிப்படையில் தோன்றாமையால், “சுத்த வியப்பாம்” என்று சொல்லுகின்றார். இது பெரிதும் வேறுபட்டு இங்கித மாலையிற் (1859) காணப்படுகிறது.

     (10)