காப்பு

 

 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1771.

     ஒருமா முகனை யொருமாவை
          யூர்வா கனமா யுறநோக்கித்
     திருமான் முதலோர் சிறுமையெலாந்
          தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
     கருமா லகற்றுங் கணபதியாங்
          கடவு ளடியுங் களித்தவர்பின்
     வருமா கருணைக் கடற்குமர
          வள்ள லடியும் வணங்குவாம்.

உரை:

     கயமுகன் என்ற அசுரனையும், சூரவன்மன் என்ற அசுரனையும் ஊர்ந்துசெல்லும் வாகனமாக வருமாறு நோக்கியருளியும், திருமால் முதலிய தேவர்கட்கு நேர்ந்த துன்ப மெல்லாவற்றையும் தீர்த்தருளியும், எமக்குள்ள இரு கண்மணி போன்று, பிறவிக்கேதுவாகிய மயக்கத்தைப் போக்கியருளும் கணபதி யென்ற கடவுளின் திருவடியையும், அவர்க்குப் பின்தோன்றிய கருணைக்கடலாகிய குமாரக் கடவுளின் திருவடியையும் மகிழ்ச்சியுடன் வணங்குவோம். எ.று.

     மாமுகன் - யானைமுகத்தையுடைய கயமுகாசுரன். ஒருமா - மாமர வடிகொண்டு நின்ற சூரவன்மா என்ற அசுரன். கயமுகன் பெருச்சாளியாய்க் கணபதிக்கு ஊர்தியானதும், சூரவன்மா மயிலாய் முருகவேட்கு ஊர்தியானதும் இங்கே குறிக்கப்படுகின்றன. கயமுகனாலும் சூரவன்மாவாலும் திருமால் முதலிய தேவர்கள் உற்ற இடுக்கண்கண் கணபதி முருகவேள் இருவராலும் ஒழிந்த திறத்தைத் “திருமால் முதலோர் சிறுமையெலாம் திர்த்து“ என்றும், தேவர்க்குற்ற சிறுமையைப் போக்கிய இருவரும் மண்ணுலகத்து நமக்கு உளதாகிய பிறவி மயக்கத்தை நீக்குவரென்றற்குக் “கருமால் அகற்றும்“ என்றும் குறிக்கின்றார். இருவர்க்கும் நமக்கும் உள்ள தொடர்பு மக்களுக்கும் கண்ணின் மணிக்குமுள்ள தொடர்பாம் என்பது தோன்ற “இருகண் மணியாகி“ என உரைக்கின்றார். கணபதிக்குப் பின் தோன்றினவராதலின், “பின்வரும் குமரவள்ளல்“ எனவும், அருளிற் கடல் போன்றவரென்பது விளங்க “மாகருணைக் கடல்“ எனவும் கூறுகின்றார். “களித்து வணங்குவோம்“ என இயைக்க. நோக்கி, தீர்த்து, ஆகி, அகற்றும் கடவுள் அடியும், பின்வரும் குமரவள்ளல் அடியும் களித்து வணங்குவோம்; அதனால், எடுத்த இங்கிதமாலை என்னும் இந்நூல் முட்டின்றி இனிது முடியும் என்பது கருத்து.

     இங்கே குறிக்கப்படும் முருகனே “திருவொற்றியூரில் ஸ்ரீ படம்பக்க நாதர் சந்நிதியில் உட்பிரகாரத்தில் வீற்றிருக்கும் முருகக் கடவுள்“ என்றும், அவரே இந் நூலாசிரியர்க்கு “உபாசனா மூர்த்தி“ என்றும், இவ்விங்கித மாலைக்கு உரை கண்டோருள் ஒருவரான திருவேங்கடநாயுடு கூறுகின்றார். அதனையே காவிதிப்பாக்கத்துத் தெய்வசிகாமணிப் பிள்ளையும், ஆடியபாத முதலியாரும் வற்புறத்துகின்றார்கள்.