ப
பாடாண் திணை
கடவுள்மாட்டு
மானிடப்பெண்டிர் நயந்த பக்கம்
( வினா உத்தரம் )
வளமுடைய ஒருவனும் ஒருத்தியும ஒத்த காதலுணர்வினராய் உரையாடுவது அன்பின் ஐந்திணை. அவ்வாறின்றி,
ஒருவனிடத்தோ ஒருத்தி யிடத்தோ காதற் குறிப்புளதாக உரையாடுவது ஒருதலைக் காதலுரை என்றும் கைக்கிளையென்றும்
அகப்பொருள் நூலார் கூறுவர். மக்களினத்து வேந்தனோ செல்வனோ வீதிவழியே உலாவரக் கண்டு பரத்தையினத்து
மகளிர் தாமே அவன்பாற் காதலுற்று, அவனுடைய ஆண்மை கொடை வீரம் முதலியன பொருளாகப் பேசுவது
அகப்பொருள் வகையிற் கைக்கிளை எனவும், புறப்பொருள் வகையில் பாடாண் எனவும் கூறப்படும்.
காதலுற்று மகளிர் வாயிலாக ஆண்மகன் புகழ் பாடுவது கருத்தாயின் புறத்திணைப் பாடாண்; காதல்
பொருளாயின் அகத்திணைக் கைக்கிளை என வேறுபடுத் துணரவேண்டும்.
இங்கித
மாலைக்கண் வரும் பாட்டுக்கள் யாவும் திருவொற்றியூர் இறைவனைப் புகழ்ந்தும், கவர்பொருள்பட
அவன் உரையாடியதை வியந்தும் மகளிர் தமக்குள் பேசிக்கொள்வது பொருளாக அமைந்திருப்பதால்,
பொருள் இலக்கணத்துப் புறப்பொருள் வகையிற் புறத்திணைப் பாடாண் பாட்டுக்களாகும்.
இங்கே
மகளிரால் நயந்துரைக்கப்படுபவன் இறைவன். அவன் ஆண்பாற் கடவுளாதலின், இப்பாட்டுக்கள்,
புறப்பொருள் பாடாண் திணையாய்க் கடவுள்மாட்டு மக்களினத்து மகளிர் நயந்து உரையாடும் பொருண்மையவராய்
இயலுதலால், இவை ‘கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ எனக் குறிக்கப்படுகின்றன.
இக்கருத்தைப் புறப்பொருள் வெண்பாமாலை யுரைத்த ஐயனாரிதனார், “முக்கணான் முயக்கம் வேட்ட மக்கட்
பெண்டிர் மலிவுரைத்தன்று” என்பர். அஃது எங்ஙனம் அமையுமெனின், முன்னோராகிய தொல்காப்பியனார்
“காமப் பகுதி கடவுளும் வரையார், ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்“ என்பதனோடு நில்லாமல்,
தமக்கு முன்னோர்கள் காலத்திருந்தே இவ் வழக்காறு இருந்து வருகிற தென்பாராய், “என்மனார்
புலவர்“ என்று வற்புறுத்தியிருத்தலால் அமையும் என்று அறிதல் வேண்டும்.
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1772. திருவார் கமலத் தடம்பணைசூழ்
செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
மருவார் கொன்றைச் சடைமுடிகொள்
வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
னொருவா தடைந்தே னினிநமக்கிங்
குதவ வருந்தோ றுன்முலைமே
லிருவா ரிடுநீ யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: திருவார் கமலத் தடம்பணை சூழ் செல்வப் பெருஞ்சீர் ஒற்றியில் வாழ் மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ளல் இவர்க்கு-
திருவிளங்கிய தாமரைகள் நிறைந்த நீர்நிலைகளும் நன்செய் வயல்களும் சூழ்ந்து, செல்வத்தால் பெரும்புகழ் படைத்த திருவொற்றியூரில் உறையும், மணம் கமழும் கொன்றைமாலை சூடிய சடை பொருந்திய முடியையுடைய வள்ளலாகிய இவர்க்கு;
'திரு' கண்கவரும் அழகு; மலர்ந்து மணங்கமழும் தாமரைப் பூவிற்கு இவ்வழகு இயற்கையில் இனிதமைந்திருப்பதுபற்றித் “திருவார் கமலம்” என எடுத்து மொழிகின்றார். திருவொற்றியூர், நெய்தல் நிலத்து மருதவளம் பொருந்திய ஊர்; ஆதலால் தடம்பணை சூழ்ந்து செல்வம் பெருகிச் சிறந்து விளங்குகிற தென்றற்குத் “தடம்பணைசூழ் ஒற்றி” எனவும்- “செல்வப் பெருஞ்சீர் ஒற்றி” எனவும் இயைய உரைக்கின்றார். தடம் - நீர்நிலை. பணை - நன்செய்வயல். செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வது பற்றி, “செல்வப் பெருஞ்சீர் ஒற்றி” என்று சிறப்பிக்கின்றார். “வாரிகுன்றா ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனியருணைந்த சோலைத் திருவொற்றியூரை எப்போதும் தொழுமின்களே” (திருவிருத்) என்று திருநாவுக்கரசர் சிறப்பித்துரைப்பது காண்க. திருவருட் செல்வத்தை வரையாது வழங்கும் குறிப்புத் தோன்ற “வள்ளல்” என்கின்றார். இது பாடாண் பகுதி.
இவர்க்குப் பலிகொடு நான் ஒருவாது அடைந்தேன்; இனி நமக்கு இங்கு உதவ வருந்தோறு உன்முலைமேல் இருவார் இடுநீ என்கின்றார். வள்ளலாகிய இப்பெருமானுக்கு மறுப்புரையின்றிப் பலியேந்திக்கொண்டு சென்றேனாக, இனி நமக்கு உதவும் பொருட்டு வரும்போதெல்லாம் நீ இருவார் இடு என்று உரைக்கின்றார்; சேடி இதுதான் என்னேடீ - தோழி இருவார் இடு என்ற இதன் பொருள் என்னையோ. எ.று.
'இவர்க்கு ஒருவாது பலி கொடு அடைந்தேன்' என இயையும். ஒருவுதல், ஈண்டு மறுத்தல் மேற்று. கொண்டு, கொடு என வந்தது. உதவுதல்-பலி தருதல். மார்பிற் கச்சணியால் பலியிடச் செய்வதை விடுத்துப் பிறரை இடுமாறு ஏவாமற் பலிகொண்டு சென்றேன் என்பாளாய். “ஒருவாது பலிகொடு அடைந்தேன்” என்றும், பலியேற்குமவர், என்னை நோக்கி, மிகவும் பருத்துள்ளமையின் “முலைமேல் இருவார் இடு நீ என்கின்றார்” என்றும் உரைக்கின்றார். இருவார் - பெரிய கச்சு. “ஏந்திடை மேல், ஏயும் இருவார் எழில் ஒருவா மிக்க வலி, வீயும் என எழுந்த வெம்முலையாள்“ (வேங்கையுலா) என்ற சிவப்பிரகாச சுவாமிகள் பாடுவது காண்க. “முலைமேல் இருவார் இடு” என்பது, கேட்டவட்கு வேறு பொருள்பட ஒலிக்கிறது. முலைமேல் - முல்லையாகிய கற்பு மகளிர்க்கு மேலாயது; இரு - அதன்கண் உறைத்து இரு; வார் - உதவும் பலி கூழாயின் வார்; இடு - சோறாயின் இடு எனப் பொருள் கொண்டு சொல் நலத்தை வியந்து, “இதுதான் சேடி, என்னேடி” என்று மொழிகின்றாள். சேடி - தோழி. ஆடவனை ஏடா என்றலும், பெண்ணை ஏடி என்றலும் வழக்கு.
இதன்கண், முலைமேல் இருவார் இடு என்ற கூற்று அறிவுரையாக அமைந்திருப்பது காண்க. (1)
|