1774. பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப்
பிச்சைத் தேவ ரிவர்தமைநான்
றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ
தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன்
மட்டி னொருமூன் றுடனேழு
மத்தர் தலையீ தென்றுசொலி
யெட்டி முலையைப் பிடிக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, பிட்டுக்காக வையைக் கரையடைக்க மண் சுமந்து திருவொற்றியூர்ப் பிச்சைத் தேவராகிய இவரை, அழகிற் குறைபடாத மலர் போன்ற கையின்கண் உள்ளது யாது? யான் தரும் சோறாகிய ஓதனத்தை வாங்கிக் கொண்மின் என்றுரைத்தேன்; சொன்ன மாத்திரத்தே இது பதுமத்தர் தலையென்று சொல்லிக்கொண்டு, முலையைப் பிடிக்கின்றார்; ஏடீ, இது என். எ.று.
மதுரையில் உண்மையன்புடைய வந்தியின் பொருட்டுக் கூலியாளாய் வந்து, அவள் தந்த பிட்டுக்காக வையைக் கரையுடைப்பில் மண்சுமந்து கொட்டிய வரலாறு இங்கே குறிக்கப்படுகிறது. பிச்சைத்தேவர் வடமொழியில் பிட்சாடன மூர்த்தி என வழங்கும் திருவொற்றியூர் இறைவனைப் பாடிய சான்றோர் பலரும் பிச்சைத்தேவராய்ப் பலியேற்ற திறத்தையே வியந்து பாடுகின்றார்கள். ஞானசம்பந்தர், “தலையே கலனா ஊரிடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே” என்பதும், நாவுக்கரசர். “ஊனகம் நாறும் முடைதலையிற் பலிகொள்வதும்தான், தேனக நாறும் திருவொற்றியூர் உறைவார் அவர்தாம், தானக மேவந்து போனகம் வேண்டி உழிதர்வரே” என்பதும் ஈண்டு நினைகூரற்குரியன. தட்டு - குறை; மலர்க்கைக்குக் குறை யழகின்மை. பலிவேண்டி வரும் மலர்க்கை அழகிய தட்டம் (தட்டு) ஏந்தாமல் ஓடேந்துவது கண்டு, பலியிடவந்த நங்கை “தட்டில் மலர்க்கை” என்று சிறப்பித்து, அதன் கண் ஓடிருப்பது கண்டு, “தட்டில் மலர்க்கையிடத்து எது” என்று வினவி, தான் கொணர்ந்த சோற்றை ஏற்றுக் கொள்க என்பாளாய், “ஓதனத்தைப் பிடியும்” என்று உரைக்கின்றாள். ஓதனம் - சோறு. தயிர்ச்சோற்றை வடமொழியில் ததியோதனம் என்பர். கையிடத்துள்ளது யாது என்றாட்குப் பதுமத்தர் தலை என்பாராய், “ஒரு மூன்றுடன் ஏழு மத்தர் தலை இது” எனப் பிச்சைத்தேவர் உரைக்கின்றார். பலி தரும் நங்கை, கையிடத்துளது எதுவோ அதன்கண் ஓதனத்தைச் சிந்தாமல் வாங்கிக் கொள்க என்பாளாய்க் “கையிடத்து எது வோதனத்தைப் பிடியும் என்று உரைத்தாள்”. அவளது உரையை மலர்க்கையிடத்து எதுவோ, தனத்தைப் பிடியும் என்றாளாகக் கொண்டு அவர் செய்த்தைத் தன் சேடிக் குரைப்பாளாய், “எட்டி முலையைப் பிடிக்கின்றார் இதுதான் சேடி என்னேடீ” என மருண்டு கூறுகின்றாள். எட்டி முலையைப் பிடிப்பது வேறு பொருள் பட நிற்கிறது. முல்லை என்பது இடை குறைந்து முலையென வந்துளது; முல்லை - முல்லை யரும்பு போன்ற சோற்றுக்குப் பெயர். கொடுக்கும் சோற்றை எட்டி வாங்கும் செயல் “எட்டி முலையைப் பிடிக்கின்றார்” என்று குறிக்கப்படுகிறது. மூன்றுடன் ஏழு மத்தர் தலை - பத்து மத்தர், பதுமத்தர் தலை. பாட்டின்கண் ஒருபது மத்தர் தலை யென்றது, பிரமதேவர்கள் பலர் என்பதை உணர்த்தற்கு. “நூறு கோடி பிரமர்கள் நுங்கினார்” என்று திருநாவுக்கரசர் கூறுவர் (3)
|