1775.

     மடையிற் கயல்பா யொற்றிநகர்
          வள்ள லாகு மிவர்தமைநா
     னடையிற் கனிவாற் பணியென்றே
          யருளீ ருரியீ ருடையென்றேன்
     கடையிற் படுமோர் பணியென்றே
          கருதி யுரைத்தே மென்றுரைத்தென்
     னிடையிற் கலையை யுரிகின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடி, சேடி, மடையில் கயல்பாய் ஒற்றிநகர் வள்ளலாகும் அவர்தமை, நான், நன்செய் வயல் நீர் மடைகளில் கயல்மீன்கள் துள்ளிப்பாயும் ஒற்றி நகர்க்கண் உறையும் வள்ளற் பெருமானாகிய இவரை மனைநோக்கி வரக்கண்ட யான்; உடை ஈர்உரியீர் - உடையாகக் குளிர்ந்த தோலை உடையவரே; அடையில் கனிவால் பணி என்று அருளீர் என்றேன் - நீவிர் எங்கள் மனைக்கு வரின் அன்புடன் யான் செய் பணி இன்னதென உரைத்தருளுக என்று கேட்டேனாக, கடையிற்படும் ஓர் பணி என்ற கருதியுரைத்தோம் என்று உரைத்து, கடையில் விற்கப்படும் மேகலை என்ற அணியை நினைந்துரைக்கின்றீர் போலும் எனச் சொல்லிக்கொண்டு, என் இடையிற் கலையை உரிக்கின்றார் - என் இடையில் உள்ள சேலையை அவிழ்க்கின்றார்; சேடி, இதுதான் என்னேடீ. எ.று.

     ஒற்றிநகர் உரையும் பிச்சைத் தேவராகிய இவர் தோலாடையுடுப்பது இயல்பாதல் கண்டு “உடை உரியீர்” என்று சிறப்பித்தாள். உரி - தோல். உரிக்கப்படுதலால், தோல் உரியெனப்படுகிறது. உரியுடையீர் எனல் வேண்டுவது 'உடை ஈருரியீர்' என மாறி நின்றது. தோலாடையுடுத்துப் பலிவேண்டி வருவராயின் அவரை இனிது வரவேற்றுப், பணி விடை செய்வது நல்லறமாதலால், செய் பணி இதுவென்று அன்பு கனிந்து உரைக்கவேண்டும் என்பாளாய், “அடையின் கனிவால் பணி என்று அருளீர்” எனக் கேட்கின்றாள், பலியிட வந்த நங்கை. உடை ஈருரியீர்” என அவள் உரைத்தற்கு, உடுத்த உடையை ஈர்த்து அவிழ்க்கின்றீரில்லை என்று பொருள்கொண்டு, என் இடையிலுள்ள உடையை இழுக்கின்றார் என்றும், பணி அருளீர் என்றதற்கு மேகலை என்று கொண்டு அதனை என் இடையில் அணிதற்கு மேலுடையை ஈர்க்கின்றார் என்றும் சேடியிடம் தெரிவிக்கின்றாள். இனி, கடையிற்படும் பணி என்றதற்குக் கடல் கடைதற்குக் கொள்ளப்படும் பணி (பாம்பு)யாகிய வாசுகி என்றுறுதி யுரைத்ததாகக் கொண்டு, என் இடையிற் கலையை உரிகின்றார் என்றாள் எனப் பொருள் கூறுவாரும் உண்டு. செய்பணி யருளுக என்றேனாக, என் இடையில் கலையை உரிகின்றாரே; கருத்தென்னை என்பாள் “சேடி, இது என்” என உரைக்கின்றாளாம்.

     (4)