1776. மன்றன் மணக்கு மொற்றிநகர்
வாண ராகு மிவர்தமைநா
னின்றன் பொடுங்கை யேந்தனத்தை
யேற்றார் கலத்திற் கொளுமென்றே
னன்றன் புடையா யெண்கலத்தி
னாங்கொண் டிடுவே மென்றுசொலி
யென்றன் முலையைத் தொடுகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ..
உரை: ஏடீ, சேடி, எங்கும் மலர்ந்த பூக்களின் மணம் கமழும் திருவொற்றியூரின்கண் வாழ்பவராகிய இவரை, இன்று அன்புடனே என் கையில் ஏந்திய சோற்றுப் பலியை ஓர்காலத்தில் ஏற்றுக் கொள்ளும் என்று நான் சொன்னேனாக, பெரிதும் அன்புடையவளே, எட்டுக் கலங்களில் நாம் கொள்வோம் என்று உரைத்து, என் முலையைத் தொடுகின்றார் ஏடீ, இது என்ன? எ.று.
வீடுகளில் முன்னும் பின்னும் சோலைகளிலும் பூத்திருக்கும் பல்வகைப் பூக்களின் நறுமணம் எங்கும் கமழ்வதால், “மன்றல் மணக்கும் ஒற்றிநகர்” என்று புகழ்கின்றார். வாணர் - வாழ்நர்; வாழ்பவர். பலிவேண்டி நின்றவரைப் பார்த்து, கையேந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொள்ளுமெனக் கூறியதை அவர், கையேம் தனத்தை ஏற்றுக் கொள்ளும் என்றதாகக் கொண்டு, வெறுத்து வெகுளமாட்டோம் எம் முலையை ஏற்றுக் கொள்ளும் எனப் பொருள் செய்கின்றார்; அதனோடு நில்லாமல், தமது மார்பைக் காட்டி எண்கலத்தில் கொண்டிடுவோம் என்று வாயாற் சொல்லிக் கையால் என் முலையைத் தொடுகின்றார். இவ்வாறு நங்கை கூறுகிறாள். எண்கலம் என்றது அகலம் எனவும், முலை என்றது முல்லை யரும்பு போன்ற சோறு எனவும் கொள்க.
ஒருகலத்தில் ஏற்றுக்கொள்ளும என்றாட்கு எட்டுக்கலத்தில ஏற்றிடுவோம் என்பது விடையாயிற்று. எட்டு என்னும் தமிழிலக்கம் அகர எழுத்துப் போறலின் எண்கலம் அகலம் என்றாகி மார்புக்காயிற்று கலம் என்பது அணிவகையையும் குறித்தலால், கையேம் தனத்தை ஓர் அணிகலம்போல ஏற்றுக்கொள்ளு மென்றதாகக் கொண்டு, மார்பிலணியும் கலமாக ஏற்றிடுவோம் என விடை கூறுவதாகக் கொள்க. சோறு உண்பதையும் கலம் அணிவதையும் தொடுவது என்னும் வழக்குபற்றித் “தொடுகின்றார்” என வந்த தென்க. “கலத்திற் கொள்ளும்” என்பது ஐந்தனுருபேற்று ஒப்புப் பொருளில் கொள்ளப்படுகிறது. (5)
|