1777.

     கோமாற் கருளுந் திருவொற்றிக்
          கோயி லுடையா ரிவரைமத
     மாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின்
          றடியேன் மனையினிடைத்
     தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன்
          றாவென் றார்தந் தாலென்னை
     யேமாற் றினையே யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி, தொண்டை நாட்டுக் கோமானாகிய தொண்டைமானுக்கு அருள்புரிகின்ற திருவொற்றியூர்க் கோயிலையுடையவராகிய இவரை, மதம் பொழியும் யானையை வென்ற நீர் இன்று எங்கும் போக வேண்டா; அடியேன் மனையின்கண் யான் தரும் அவியுண்டு மகிழ்ந்து மாலையணியப் பெற்றுக் கொண்டு ஏகும் என்று சொன்னேனாக, அவர் தா என்று சொல்லவும், யான் தந்தால் என்னை ஏமாற்றினையே என்று கூறுகின்றார்; சேடி, இது என்னேடி. எ.று.

     தொண்டைமான் தொண்டை நாட்டரசனாதலின், “கோமான்” என்று பொதுப்பட மொழிந்தார். கோயில் - தலைமையிடம். மதமா - யானை. யானையைக் கொன்று அதன் தோலை யுரித்துப் போர்வையாகக் கொண்டார்; அதனால் “மதமா மாற்றிய நீர்” எனப் பலியிடும் நங்கை கூறுகின்றாள். “நீர் ஏகல், இன்று அடியேன் மனையினிடை அவிமகிழ்ந்து மாற்று மாலை தரக்கொண்டு ஏகுமென்று” அவள் சொல்லுகிறாள். அவர் தா என்று சொல்ல, அவள் தருதலும்; அவர் உணவு தந்து உபசரித்து இன்புறுவித்தாய் என்ற கருத்தில் “ஏம் ஆற்றினை” என உரைத்தார் என்பது நேரிய பொருள். தாமம் - ஏமம் என்பன தாம், ஏம் எனக் கடை குறைந்து நின்றன. அவி - சோறு. தாமம் - மாலை, சந்தனம். ஏமம் - இன்பம். “ஏமவைகல்” என்பது காண்க.

     'காம மதம் கொள என்னைக் கட்பார்வையால் மாற்றிய நீரே, அடியேன் மனையிடை இன்று கலவி மகிழ்ந்து, மாலை சந்தன முதலியன யான் தரக் கொண்டு ஏகுமின் என்று பலியிடும் நங்கை கூறியதாகக் கொண்டு, 'தருக' என்று கேட்க, பலி தந்தபோது, சொல்லியன செய்யாது ஏமாற்றினாய் என்ற கருத்துப்பட என்னை ஏமாற்றினை என்கிறார் என, வேறு பொருள்பட நிற்பது காண்க. கலவி மகிழ்தல் - கலந்து இன்புறுதல்.

     என்னையே மாற்றினையே என்பது, மதமாற்றிய என்னையே உன்னை நயப்பவன் போல மாற்றிவிட்டாய் எனவும், ஏம் (மயக்கம்) ஆற்றி விட்டாய் (செய்து விட்டாய்) எனவும் வேறு வேறு பொருள்படுவது அறிக.

     (6)