1778.

     அம்மா லயனுங் காண்பரியீர்க்
          கமரும் பதிதான் யாதென்றே
     னிம்மா லுடையா யொற்றுதற்கோ
          ரெச்ச மதுகண் டறியென்றார்
     செம்மா லிஃதொன் றென்னென்றேன்
          றிருவே புரிமேற் சேர்கின்ற
     வெம்மான் மற்றொன் றென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ..

உரை:

     ஏடீ, சேடி, அந்தத் திருமாலும் பிரமனும் காண்பதற்கரிய பெருமானாகிய தங்கட்கு விருப்பமான ஊர் யாது என்று வினவினேன்; எமது பதியறியாமைக் கேதுவாகிய மயக்கத்தை யுடையவளே, ஒற்று என்னும் முதனிலை வினை யெச்சமான ஒற்றி; அவ்வூர்க்குச் சென்று அங்கே என்னைக் கண்டு அறிந்து கொள் என்று, அவர் சொன்னார்; செம்மலே, இப்பெயர் ஒன்றுதானோ, வேறு உளதாயின் அஃதுஎன் என்று மேலும் கேட்டேனாக, திருமகளே, புரியென்னும் சொல்மேல் வந்து கூடி நின்ற எம்முடைய பெரும்பெயர் ஒன்று எனச் சொல்லுகின்றார். ஏடீ சேடி, இது என்னையோ. எ.று.

     அம்மால் என்றவிடத்து அகரம் பண்டறி சுட்டு. மாலும் பிரமனும் முறையே அடியும் முடியும் காணமாட்டாதொழிந்த வரலாறு கொண்டு, பலியிட வந்த நங்கை “காண்பரியீர்” எனப் பிச்சைத்தேவரை முன்னிலைப் படுத்துகிறாள். அமரும் பதி - விரும்பும் ஊர். அவளுடைய அறியாமை நீங்கக் கூறுதல் தோன்ற, “இம்மால் உடையாய்” என்று உரைக்கின்றார். ஒற்றுதலாகிய வினைக்கு முதல்நிலை ஒற்று; அது வினையெச்சமாகும்போது ஒற்றி என்று ஆகும். இவ்வாறு அறியப்படுவது என்றற்கு “ஒற்றுதற்கு ஓர் எச்சம் அது கண்டறி” என மொழிகின்றார். பதி யாது என்பதனைப் பதித்துவம் யாது எனக் கேட்டதாகக் கொண்டு, ஒற்றியூரை யடைந்து கோயிற்குட் சென்று எமது பதித்துவத்தைக் கண்டு அறிக என்ற பொருள்பட, “அது கண்டறி” என்றார் என்றலும் ஒன்று. செம்மல் என்னும் தலைமை யுணர்த்தும் பெயர் செம்மால் என விளியேற்றது. இஃது ஒன்று என்றவிடத்து, வினாப்பொருளில் வந்த ஓகாரம் தொக்கது. அதனால், மேலும் உளதாயின் அது யாது என குறிப்பு எஞ்சி நின்றது. புரிமேற் சேர்க்கின்ற எம்மால் (பெயர்) ஒன்று, ஆதிபுரி என்பது. எம்மால் ஒன்று - எமது பெரும்பெயர்களில் ஒன்றாகிய ஆதி. எம்மால் என்னாது எம்மான் என்றுகொண்டு, “மான் மூலப்பகுதி; இது பலதத்துவோற்பத்திக்கு மூலமாதல் பற்றி மூலப்பகுதி எனப்பட்டது; மூலம் ஆதியாகலின் புரிமேற் சேர்கின்ற மான் என்பது ஆதிபுரியென்னும் அத்தலத்திற்குரிய பிறிதொரு பெயரை உணர்த்தியபடி” என்பர் திருவேங்கட நாயுடு.

     (7)