1779. கண்கள் களிப்ப வீண்டும்நிற்குங்
கள்வ ரிவரூ ரொற்றியதாம்
பண்க ளியன்ற திருவாயாற்
பலிதா வென்றார் கொடுவந்தேன்
பெண்க டரலீ தன்றென்றார்
பேசப் பலியா தென்றேனின்
னெண்கண் பலித்த தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, பார்ப்பவர்க்கு மகிழ்ச்சியுண்டாகுமாறு இங்கே வந்து நிற்கும் மனக்கள்வர் போலும் இவரது ஊர் திருவொற்றியூராம்; பண்ணிசை பயின்ற தமது வாயினால் பலிதா என்று கேட்டார்; நானும் கொணர்ந்தேன்; அதுகண்டு பெண்கள் தருவது ஈதல்லவே என்று சொல்லவே, நீர் பேசும் அப் பலி யாதாம் என்று வினவினேன்; நின் எண்ணத்தின்கண் பலித்துவிட்டது என்று விடையிறுக்கின்றார்; ஏடி, சேடி, இது என்னே. எ.று.
காணும் கண்ணுக்கு மகிழ்ச்சியும், காணாவிடத்து மனத்தில் பிறர் காணாவாறு தோன்றி இன்பமும் செய்தல்பற்றி, “கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர்” என்றும், எவ்வூரீர் என்றாட்குத் திருவொற்றியூர் தமது ஊர் என்றமை புலப்பட, “இவர் ஊர் ஒற்றியதாம்” என்றும் பலியிட வந்த நங்கை உரைக்கின்றாள். ஒற்றியது என்றவிடத்து, அது என்னும் சுட்டு, “சாத்தனவன் வந்தான்” என்றாற்போல இயற்பெயர் வழி வந்தது. (சொல். கிளவி. 38). ஏனை வருமிடங்களில் இதுவே கூறிக் கொள்க. பிச்சைத்தேவர் பலி கேட்ட திறம் பண்ணின் இசை போல் செவிக்கு இன்பம் செய்தமை தோன்ற, “பண்கள் இயன்ற திருவாயால் பலிதா என்றார்”; கேட்ட அவள், உண்பலிதானே கேட்கின்றார் என்று கொண்டு சோறு கொண்டு போனேன் என்பாளாய்க் “கொடு சென்றேன்” என்று சேடிக்குச் சொல்லுகிறாள். “வாங்கிக் கொண்டாரன்றோ” எனச் சேடி கேட்டாளாக, பலிதா என்பதற்கு வேல், வாள் முதலிய எறிபடைத் தொகுதியெனப் பொருள் கருதிக்கொண்டு, எனது பலியைப் பார்த்து மறச்செல்வர்களால் தரப்படுவதன்றிப் பெண் தரப்படுவதன்று என்ற பொருளில் “பெண்கள் தரல் ஈது அன்று என்றார்” என்று சொன்னார்; நீர் கேட்பது பெண்கள் பலியன்றாயின், அப்பலி யாது என்னும் கருத்தால், “பேசும் அப்பலியாது என்றேன்” என்றும், நங்கை நவில்கின்றாள். பெண்களால் தரப்படுவதன்றெனவே அவரிடத்தே நுகரப்படுவதாம் என்ற பொருள் தோன்றவும், அப்பேச்சு தன்னிடத்தே பலிக்காது என்ற கருத்தில், அவள் “பேசப் பலியாது” என்று சொல்லி முறுவலிக்கவும், அதுகண்டு சொல்லுக்கும் செயலுக்கும் முதலாகிய மனத்தின்கண் பலிதமாய் விட்டது என்பார்போல், “நின் எண்கண் பலித்தது என்கிறார்” என்று மொழிகின்றாள். எண் - எண்ணம் - மனம்.
“பெண்கள் தரல் ஈதன்று” என்று கேட்டவள், தருவதை ஏற்காமல் இவ்வாறு பேசினால் இப்பலியும் உனக்குக் கிடைக்காது என்பாளாய், “பேசப் பலியாது” என்றாள் என்றும், நீ பலியாது என்றாலும் உன் மார்பில் தனமாய்ப் பலித்துளது என்றாரென்றும் பொருள் கூறுவர். 'பலிதா' என்பதற்குப் பலித்தவளே என்று பொருள் கொள்வர் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு அவர்கள். (8)
|