178.

    வாணுதற் பெருமாட்டி மாரொடு
    காணுதற் குனைக் காதல் கொண்டனன்
    ஏணுதற் கென தெண்ணம் முற்றுமோ
    மாணுதற் புகழ்த் தணிகை வண்ணனே.

உரை:

     மாண்புடைய புகழ் பொருந்திய தணிகையில் உள்ள அழகனே, ஒள்ளிய நெற்றியை யுடைய பெருமாட்டிகளாகிய வள்ளி தெய்வயானை என்ற இருவருடன் இருக்கும் காட்சியைக் காண்பதற்கு யான் ஆர்வம் கொண்டுளேன்; என் ஆசை முற்றுதற்கு உற்ற என் எண்ணம் நிறைவுறுமோ, தெரிவித்தருள்க, எ. று.

     மாணுதல் - மாண்பு. கொடை வீரம் முதலியவற்றாற் புகழுண்டாதல் போல மாண்பினாலும் புகழுண்டாதல் பற்றி, “மாணுதற் புகழ்த் தணிகை மன்னனே” என்று கூறுகின்றார். பெருமானுக்குப் பெண்பால் பெருமாட்டி. ஒருபால் வள்ளி நாயகியாரும், ஒருபால் தெய்வயானையாரும் இருக்க நடுவே முருகப் பெருமான் வீற்றிருக்கும் காட்சி காண்டற்கரிய தொன்றாகலின், “வாணுதற் பெருமாட்டிமாரொடு காணுதற் குனைக்காதல் கொண்டனன்” என வுரைக்கின்றார். காதல் - ஆர்வம். ஏணுறல்- முற்றுதல். எல்லை யளவும் மிகுதல் எனக் கூறினும் பொருந்தும். காதல் ஏணுதற்கு உரிய எண்ணவகை பலவாமாதலின், “எனது எண்ணம் முற்றுமோ” என வேண்டுகிறார். வண்ணம்-அழகு.

     இதனால், வள்ளி தெய்வயானையாரொடு முருகப் பெருமான் தோன்றும் இனிய காட்சியைப் பெற வெழுந்த ஆர்வ மிகுதி புலப்படுத்தியவாறு.

     (28)