1785.

     வண்மை யுடையார் திருவொற்றி
          வாண ரிவர்தாம் பலியென்றா
     ருண்மை யறிவீர் பலியெண்மை
          யுணர்கி லீரென் னுழையென்றேன்
     பெண்மை சிறந்தாய் நின்மனையிற்
          பேசும் பலிக்கென் றடைந்ததுநா
     மெண்மை யுணர்ந்தே யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி. வள்ளன்மையுடையவரும் திருவொற்றியூரில் வாழ்பவருமாகிய இவர் பலி வேண்டும் என்று என் மனைக்கு வந்தார்; உண்மையுணரும் அறிவுடையவராகிய நீர் என்பால் பலி பெறுவதன் எளிமைத் தன்மையை உணர்கின்றீரில்லையே என்று நான் சொன்னேனாக, பெண்மை மிக்கவளே, நின்னுடைய மனைக்கும் பேசும் பலிக்கென்று வந்தது எளிமைத் தன்மையை முற்படவுணர்ந்தே யாகும் என்று உரைக்கின்றார்; இதுதான் என்னையோ? எ.று.

     உண்மையறிவீர் - மனத்தின் கண்ணும் மனையின் கண்ணும் உள்ளதன் உண்மையை உள்ளவாறு அறிவீர்; “பலியெண்மை உணர்கிலீர்” என்றது, என் மனைக்கண் நல்கப்படும் உண்பலியின் எளிதாம் தன்மையை நீவிர் உணரவில்லை; பலிப்பொருளின் எளிமையும், பலி பெறுவதன் எளிமையும் உணர்கின்றீரில்லை என்றதாம். எளிமைத்தன்மை, எண்மை என வந்தது. வேண்டும் பலிவகை அத்தனையும் எம்பால் பெறுவது எளிது என்றாளாம். அது கேட்டு பிச்சைத் தேவர், சிற்றின்பமாகிய பலி நல்குதற்கும் நீ எளிமையாய்ச் சிறந்திருக்கின்றாய் என்ற பொருள் தோன்றப் “பெண்மை சிறந்தாய்” என மொழிந்து, யாம் அது வேண்டி வரவில்லை. நின்னோடு உரையாடலாற் பெறலாகும் இன்பமாகிய பலி வேண்டியாகும் என்பது விளங்க, “பேசும் பலிக்கு என்றடைந்து” என்று உரைக்கின்றார். பேசும் பலி யென்பது பேசுவதாகிய பலி எனப்படும்; “நின்முகம் காணும் மருந்து” என்றாற் போல. நின்னுடைய பெண்மை நலம் சிறப்புடையது. பெறற்கரியது; பேசும் பலி எளிமையானது என்பதை நன்கறிவோம் என்பாராய், “எண்மை யுணர்ந்தே” என உரைக்கின்றாராயிற்று. எண்மை யுணர்கிலீர் என்றவட்கு, “எண்மையுணர்ந்தே நாம் அடைந்தோம்” என்று விடை கூறியவறு காண்க.

     (14)