1786.

     திருவை யளிக்குந் திருவொற்றித்
          தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
     வெருவ லுனது பெயரிடையோர்
          மெய்நீக் கியநின் முகமென்றார்
     தருவ லதனை வெளிப்படையாற்
          சாற்று மென்றேன் சாற்றுவனே
     லிருவை மடவா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி, வழிபடுபவர்க்குத் திருவை நல்கும் திருவொற்றியூரில் உறைபவராகிய தேவரீர்க்கு விருப்பமாவது யாது என்றேனாக, அஞ்சல் வேண்டா; உன் இயற்பெயர்க்கண் உள்ள ஒரு மெய்யெழுத்தை நீக்கி முகத்தொடு சேர்க்க வரும் நின் முகம் என்று சொன்னார்; அவர்க்கு நானும் பின்னிடாமல் தருவேன்; சொல்வதனை வெளிப்படையாய் மொழியும் என்று கேட்டேன்; மடவாய், நான் அவ்வாறு சொன்னால் வையென இருமுறை சொல்வாய் என உரைக்கின்றார்; இது தான் என்னையோ. எ.று.

திரு - செல்வமும் ஞானமும். பெத்தநிலைக்குச் செல்வமும், முத்தி நிலைக்கு ஞானமும் திருவாய், முறையே புகழும் வீடும் பயக்கும் என அறிக. தேவர் என்பது தேவரீர் என முன்னிலைப் பெயராயிற்று; ஒற்றியூர்ப் பெருமானே பிச்சைத்தேவராய் வந்துள்ளார் என்பது கருத்து. மனை நோக்கி வந்த தேவர்க்கு வேண்டுவது யாது என வினவுவேனாய், “விழைவு என் என்றேன்” என்றாள். நின்ற அவரது தோற்றம் கண்டு அஞ்சும் குறிப்பு அவள் கண்ணில் பிறங்கினமையின், தேவர், அஞ்சாதே என்பாராய், “வெருவல்” என்று சொல்லி, உன்னைக் குறிக்கும் இயற்பெயரின் இடையில் ஒரு மெய்யெழுத்துண்டு; அதனை நீக்கி முகம் என்ற சொல்லக்கூட்ட வருமது யாம் வேண்டுவது என்பாராய் “உனது பெயரினிடை ஒர்மெய் நீக்கிய நின் முகம் என்றார்” என்று கூறுகிறாள். அஃதாவது நங்கை என்ற இயற்பெயரின் இடையில் உள்ள ஒரு மெய்'ங்' என்பதை நீக்க நிற்கும் நகை என்பதன்முன் முகம் என்ற சொல்லைக் கூட்ட வருவது நகைமுகம்; நின் நகைமுகம் வேண்டும் என்பதாயிற்று. வெளிப்படையாற் சொன்னால், காதலுறவு காட்டும் நகைமுகம் விழைந்தேன் என்பதாம்; அதுகேட்டு நீ வெகுண்டு வைவை என்பாராய், “சாற்றுவனேல் இருவை” என்கின்றார் எனச் சேடிக்குக் கூறுகின்றாள். வைவை என்பதில் வையென்னும் எழுத்து இரண்டு உண்மைபற்றி “இருவை” என்கின்றார்.

     விழைவு என் என்றாட்கு, வெளிப்படையால் நின் நகைமுகம் என்றால் நீ வைவை என்று தேவர் விடை கூறியவாறாம்.

     (15)