1787.

     முந்தை மறையோன் புகழொற்றி
          முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
     கந்தை யுடையீ ரென்னென்றேன்
          கழியா வுன்றன் மொழியாலே
     யிந்து முகத்தா யெமக்கொன்றே
          யிருநான் குனக்குக் கந்தையுள
     திந்த வியப்பென் னென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி. பழமையான மறைகளை யோதும் பிரமன் புகழும் ஒற்றியூர் முதல்வராகிய இவர் பலி வேண்டி வந்தாராக, இவரது முகத்தை நோக்கிக் 'கந்தையான உடையணிந்திருக்கிறீர்களே, இது என்னையோ' என்று வினவினேன்; அவர் என்னைப் பார்த்துச் 'சந்திரன் போன்ற முகத்தையுடையவளே; விலக்கில்லாத உன்னுடைய சொற்களால் என்னிடம் ஒரு கந்தையுளது; உன்னிடம் எட்டுக் கந்தையுளது என்று தெரிந்தேன்; இந்த வியப்புக்கு என்ன சொல்லுகிறாய்' என்கின்றார்; இதுதான் என்னையோ? எ.று.

     பிரமன் புகழும் பெருமை வாய்ந்தது திருவொற்றியூர்; அதற்கு முதல்வராய் இருப்பவர் கந்தையை உடுப்பது வியப்பாக இருந்தமையின், அவர் முன்னின்று “கந்தையுடையீர் என் என்றேன்” என்றாள். அவளுடைய முகத்தையும் உடையும் நன்கு பார்த்து நான் வினவியது கண்ட அவர், “இந்து முகத்தாய்” என்று என்னைக் குறித்தார். சந்திரனிடத்துக் களங்கம் போல் என் மனத்தகத்து அகந்தையாகிய களங்கம் இருப்பதை முகக்குறிப்பால் அறிந்து கொண்டார்; நான் அறியேன் என்பது குறிப்பு. அதனை எனக்குக் காட்டுவாராய், என்னிடம் உடையுருவில் காண இருப்பது ஒரு கந்தை; உன்னிடம் உள்ளது எட்டுக் கந்தை; எட்டு என்னும் இலக்கம் அ என்ற எழுத்துருவில் இருப்பது. எண் கந்தையை இலக்கத்தால் எழுதினால் அகந்தை என வரும். எனவே உன்பால் அகந்தையுளது; அது கூடாது என்பாராய், “எமக்கு ஒன்றே, இருநான்கு உனக்குக் கந்தையுளது” என்றும், அடக்கமும் ஒடுக்கமும் இருக்க வேண்டிய நல்ல பெண்மகளாகிய உன்னிடம் அது இருப்பது மிக்க வியப்பாக இருக்கிறது என்பாராய், “இந்த வியப்பு என்” என்றும் உரைக்கின்றார். உள்ளத்தில் அகந்தை யிருப்பது தொண்டர் தொண்டுக்கு இடையூறாகும்; “அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர்” எனக் குமரகுருபரர் உரைப்பது காண்க.

     பலி வேண்டி வந்தாரைக் கந்தையுடையீர் என்றாட்கு, நீ அகந்தையுடையாய் என அவர் விடையிறுத்தவாறு.

     (16)