1788. துன்ன லுடையா ரிவர்தமைநீர்
துன்னும் பதிதான் யாதென்றே
னென்ன லிரவி லெமைத்தெளிவா
னின்ற நினது பெயரென்றா
ருன்ன லுறுவீர் வெளிப்படவீ
துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
லின்ன லடைவா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, தைத்த வுடையணிந்த இவரை நீவிர் இருக்கும் ஊர் யாது என்றேனாக, நேற்றிரவு என் உள்ளத் தன்பைத் தெளியும் பொருட்டு ஒற்றுவிடுத்து நின்ற உனது பெயர் என்றார்; அது கேட்டு எம்மால் நினைக்கப்படுபரே, இதனை வெளிப்படையாக உரையும் என்றேன்; வெளிப்படவுரைப் பேனாயின் நீ வருத்தம் அடைவாய் என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
துன்னல் உடை - தைக்கப்பட்ட உடை. துன்னம் - தையல். “துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னே டீ” - (சாழல்) என்று திருவாசகம் ஓதுதல் காண்க. துன்னம்பதி - சேர்ந்துறையும் ஊர். பிறருடைய சொற் செயல்களை மறைவாக ஒற்றரைவிட்டு அறிந்து கொள்வது ஒற்று. நேற்றிரவு என் உள்ளத்தன்மை அறிந்து கோடற் பொருட்டு நீ ஒற்றரை விடுத்தாய்; ஒற்றினால் ஒற்றியச் செய்ததால் நீ ஒற்றி எனப்படுவாய் ஆயினை; அப்பெயர் யாம் இருக்கும் ஊர்ப்பெயர் என்பாராய், “நென்னல் இரவில் எமைத் தெளிவான் நின்ற நினது பெயர் என்றார்.” முன்னாள் இரவு முற்றும் அவள் இறைவனை நினைந்திருந்த திறத்தை, அவளே “உன்னல் உறுவீர்” என வெளிப்படுத்தி, அவர் கூற்றை மெய்ப்பிக்கின்றாள். உன்னல் - நினைத்தல். ஒற்றி என்பது எளிதில் பொருள் புலப்படாமையால், வெளிப்படவுரையும் என்றற்கு “வெளிப்பட இது உரைப்பீர் என்றேன்” என மொழிகின்றாள். தேவர் உள்ளத்து அன்பை அறிதர்கு ஒற்றினால் தெளிய முயன்றது பலர் அறிய வெளிப்பட்டு வருத்தம் விளைவிக்கும் என்பாராய், “உரைப்பேனேல் இன்னல் அடைவாய் என்கின்றார்” எனச் சேடியிடம் பலியிடும் நங்கை கூறுகின்றாள். ஒற்றியென்ற பெயரை வெளிப்பட வுரைத்தால் முன்னாள் இரவு நங்கை தேவரதன்பை ஒற்றினால் ஆய்ந்து ஒற்றியான செய்தி வெளிப்படுத்தி விடும் என்பதாம். (17)
|