1789.

     சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத்
          தேவர் நீரெங் கிருந்ததென்றே
     னெமைக்கண் டளவின் மாதேநீ
          யிருந்த தெனயா மிருந்ததென்றா
     ரமைக்கு மொழியிங் கிதமென்றே
          னாமுன் மொழியிங் கிடமென்றோ
     விமைக்கு மிழையா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     கூர்மைக் கொண்ட சூலப்படையை ஏந்தும் அழகிய மலர் போன்ற கையையுடைய தேவரே, நீர் எவ்விடத்தில் இருப்பது என்று வினவினேனாக, மாதே, எம்மைக் கண்ட அந்த அளவில் நீ இருந்த இடம் யாது, அது யாம் இருந்தது என மொழிந்தார்; அது கேட்டுப் பதிலாகத் தாங்கள் உரைக்கும்மொழி இங்கிதமாக வுளது என்று நான் சொன்னேனாக, ஒளி திகழும் அணிகளையுடையவளே, ஆமாம், உன்னுடைய சொல் இவ்விடத்திற்கு இதமாக அன்றோ இருக்கிறது, என இயம்புகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     சிமை - மலையுச்சி; மூவிலை வேலின் நுனியமைப்பு மலைச்சிமையம் போறலால் “சிமைக் கொள் சூலம்” எனப்பட்டது. எதுகை நோக்கி வலிமிக்கது. சூலப்படை ஏந்தும் கை வன்மைப் பண்புறாது மலர்போன்ற மென்மையும் அழகும் உடைமையின், “திருமலர்க்கை” என்று சிறப்பிக்கின்றார். நீர் எங்கிருந்த தென்றாளாயினும், நீர் இருந்தது எங்கு என மாறுக. கேட்பவள் இருந்த ஊரும், மனையும், அவளுடைய மனமும் தேவர் வீற்றிருக்கும் இடமாதல் பற்றி, “எமைக் கண்டளவில் நீ இருந்த தென யாம் இருந்தது” என உரைக்கின்றார். இவ்வூரில் இம்மனைக்கண் நின்கண்முன் இருந்தேம். எம்மை நின் மனத்தின்கண் கொண்டாய் என்ற குறிப்புப் புலப்பட மொழிந்தமையின், “அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன்” என்று சேடிக்குக் கூறுகின்றாள்; இங்கிதம் என்பது இங்கு இதம் எனப் பிரிந்து, இப்பொழுது இதமாய், இனிமையாய்ப் பின் பிரிந்த விடத்து நினைந்து வருந்துதற்கேற்ப வமைவதாம் என்பாராய், “ஆம் உன்மொழி இங்கு இதம் அன்றோ” என்கின்றார் என உரைக்கின்றாள். காதற் குறிப்புப் புலப்படக் கண் விரைந்து இமைப்பதும், மேனி கதிர்த்தலால் அணிந்த இழைகள் ஒளிமிகுவதும் கண்டு உரை யாடலால், “இமைக்கும் இழையாய்” எனக் குறிக்கின்றார்.

     நீர் இருந்தது எங்கு என்றாட்கு இங்கு என இதமாகக் கூறியவாறு.

     (18)