179. வண்ணனே யருள் வழங்கும் பன்னிரு
கண்ணனே யயில் கரங்கொள் ஐயனே
தண்ணனேர் திருத்தணிகை வேலனே
திண்ண மீதருள் செய்யுங் காலமே.
உரை: தண்ணிய நல்ல நேர்மை யமைந்த தணிகை மலைமேல் எழுந்தருள்பவனே, அழகனே, அருள் புரியும் பன்னிரண்டு கண்களை யுடையவனே, கூரிய படையேந்தும் கையை யுடையவனே, திண்ணமாக அருள் வழங்குதற் கேற்ற காலம் இது, காண், எ. று.
மேலன் - மேலுள்ளவன். வண்ணன் - அழகன், முகம் ஆறு உடையனாதலால், பன்னிரண்டு கண்களை யுடையவன் என்றும், அவற்றால் அடி பரவுவார்க்கு அருள் பொழிவது பற்றி, “அருள் வழங்கும் பன்னிரு கண்ணனே” என்றும் கூறுகின்றார். நிலையில்லாத வாழ்வாதலின் நின்ற பொழுதின் அருமை தோன்றத் “திண்ணம் ஈது அருள் செய்யுங் காலம்” என்று உரைக்கின்றார். மலை முடிகட்குத் தட்பம் இயல்பாதலின், “தண்ணல் நேர் தணிகை” என்று குறிக்கின்றார். தேவ சேனாபதி யாதலால், “அயில் கரங்கொள் ஐயனே” என்கின்றார்.
இதனால் காலத்தின் அருமை கூறி அருள் புரிய வேண்டியவாறாம். (29)
|