1790.

     நடங்கொள் பதத்தீர் திருவொற்றி
          நங்கள் பெருமா னீரன்றோ
     திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந்
          தீரென் றேனின் னடுநோக்காக்
     குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார்
          குடம்யா தென்றே னஃதறிதற்
     கிடங்கர் நடுநீக் கென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     கூத்தாடும் திருவடியை யுடைய நீவிர் திருவொற்றியூர்க் கண் எழுந்தருளும் எங்களுடைய பெருமானன்றோ; நீர் நிலைத்த புகழ் கொண்ட கச்சூரிடம் சேர்ந்திருக்கின்றீரே என்று சொன்னேன்; அதற்கு அவர் நினது நடுவிடத்தை நோக்காது குடம் சேர்ந்ததும் அக்கச் சூரிடமே என்று இயம்பினார்; நான் தொடர்ந்து குடம் யாது என வினவினேன்; அதனை அறிய வேண்டின் இடங்கர் என்ற சொற்பொருளின் நடுவெழுத்தை நீக்குக என உரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     கூத்தாடற்கண் தாளவறுதிக் கொப்ப அடிபெயர்த்திடப் பெறுதலால், அதன்கட் பயின்ற திருவடியென்றற்கு “நடங்கொள் பதத்தீர்” எனக் குறிக்கின்றாள் என்றும், பொன்றாத திண்ணிய புகழ் என்றற்குத் “திடங்கொள் புகழ்” என்றும், அதனையுடைமைபற்றித் திருக்கச்சூரைத் “திடங்கொள் புகழ்க் கச்சூர்” என்றும், அங்குக் கோயில் கொண்டமை விளங்கக், “கச்சூரிடம் சேர்ந்தீர்” என்றும், இடம் வேறாயினும் மூர்த்தி யொருவர்தாமே என்ற பொருள்பட “நீரன்றோ” என்றும் வினவுகின்றாள். கச்சூர் இடம் சேர்ந்தீர் என்பது, கச்சணியும் பெண்ணுரு இடப்பாகம் கொண்டிருக்கின்றீர் என்றொரு பொருள் தோன்ற நிற்பது ஒரு நயம். கச்சூர் ஆலக்கோயில் நடுவிடம் நோக்காது மேற்கில் இரந்திட்ட நாதர் எனவும் மலைமருந்தீசர் எனவும் கோயில் கொண்டமையின், “குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார்” என்றாள். குடம் - மேற்கு. நடுநோக்காது குடம் சேர்ந்தும் அஃது நடுவாகிய இடையின் சிறுமை நேக்காது குடம் தாங்குவதும் அவ்விடப்பாகம் என்றொரு பொருள் தோன்றுவது காண்க. குடம் என்றது கச்சூர்க் கோயிற் குடம் எனவும், மகளிர் இடையிற் சுமக்கும் குடம் எனவும், கச்சணியப்படும் குடம் போலும் முலையெனவும் பொருள்பட நிற்றலால், குடம் யாது என வினவுதல் இன்றியமையாமையின், “யாது என்றேன்” என்றாள். இடங்கர் என்பது முதலையைக் குறிக்கும்; அதன் நடு நீக்கிய வழி முலையைக் குறிக்கும்; அதனால், “அஃது அறிதற்கு இடங்கர் நடுநீக்கு என்கின்றார்” என உரைக்கின்றார்.

     ஒற்றியூர் உறையும் நீரன்றோ கச்சூரும் சேர்ந்தீர் என்றாட்குக் கச்சூரே யன்றி அதற்குக் குடபாலுள்ள கோயிலிலும் இடம் கொண்டோம் என்றும், கச்சூர் குடம் யாதென்று வினாவினாட்கு முலை என்றும் விடையிறுத்தவாறு.

     (19)