1791. சங்க மருவு மொற்றியுளீர்
சடைமே லிருந்த தென்னென்றேன்
மங்கை நினது முன்பருவ
மருவு முதனீத் திருந்ததென்றார்
கங்கை யிருந்த தேயென்றேன்
கமலை யனையாய் கழுக்கடையு
மெங்கை யிருந்த தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி. கடற்சங்குகள் கரையில் ஒதுங்கும் திருவொற்றியூரில் உறைபவரே, உங்கள் சடை முடிமேல் உள்ளது யாது என வினவினேனாக, மங்கைப் பருவத்தில் உள்ள உனது முன்னைப் பருவப் பெயரிற் பொருந்திய முதலெழுத்து நீங்கியதுணர்த்தும் பொருள் என்றார்; அங்கே கங்கையன்றோ இருந்தது என்று நான் சொன்னேன்; திருமகள் போல்பவளே, கழுக்கடையென்னும் சூலப்படையும் எமது கைக்கண் உளது என்று உரைக்கின்றார்; இதுதான் என்னையோ? எ.று.
'சங்கு' என்பது ஈற்றில் அம்முப் பெற்றுச் சங்கம் என வந்தது. கடற்கரை யூராதலின் அலைகள் கொணரும் சங்குகள் கரையில் மேய்ந்து உலவுதல் இயல்பென வறிக. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை யெனவரும் பருவப் பெயர்களில் மங்கைக்கு முன்னது பெதும்பை; அதனால் “மங்கை நினது முன்பருவம்” என மொழிந்தது. பலியிடும் நங்கை மங்கைப் பருவத்தாள் என்பது எய்த நின்றது. பெதும்பை என்பதன் முதலெழுத்தான 'பெ' என்ற எழுத்து நீங்க நிற்பது தும்பை; தும்பை மாலை இருந்தது என்றற்கு “மங்கை நினது முன்பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார்” என வுரைத்தாள். கங்கையைத் தாங்கி கங்காதரன் என்ற பெயர் கொண்டு விளங்குவதுபற்றிக் “கங்கை இருந்ததே என்றேன்” என்று கூறினாள். கங்கை யென்ற சொல்லைக் கம் கை எனப் பிரித்துத் தலையை ஏந்தும் கை என்று பொருள் கொண்டு, பிரமகபாலம் என்ற தலையே யன்றிக் கழுக்கடை என்ற படையும் என்னுடைய கையில் உள்ளன என்று பிச்சைத் தேவர் கூறுகின்றார். கழுக்கடை - சூலப்படை. சடைமேல் இருந்ததென்னை யென்றாட்குத் தும்பைமாலை யென்றும், கங்கையும் உண்டன்றோ என்றாட்குக் கையில் பிரமகபாலமும் கழுக்கடையும் உள்ளன எனவும் விடை கூறினார் என்பதாம். (20)
|