1792.

     துதிசே ரொற்றி வளர்தரும
          துரையே நீர்முன் னாடலுறும்
     பதியா தென்றே னப்பெயர்முற்
          பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
     நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது
          நிகழ்த்து மென்றே னீயிட்ட
     தெதுவோ வதுகா ணென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி, புகழ் பொருந்திய திருவொற்றியூரில் உறையும் தருமதுரையாகிய பெருமானே, நீவிர் முன்னை நாளில் திருவிளையாடல் புரிந்தபதி யாது என்று வினவினேன்; பதிக்குள்ள பெயரின் முன்னர்க் கூறப்படும் இரண்டு எழுத்துக்கள் நீக்க நிற்பது என்றார்; செல்வம் மிக்க அப்பதியின் பெயர் யாதாம் கூறுமின் என்று நான் கேட்க, நீ இட்டுரைத்த பெயர் யாதோ அதுவே எனக் கூறுகின்றார்; இது என்னையோ. எ.று.

     துதிக்கப்படுவது புகழாதலின், அதனைத் துதியென்றே சொல்லுகின்றார். அங்கே வீற்றிருக்கும் தியாகப் பெருமானைப் பாராட்டிப் புகழ்தல் தோன்ற “தருமதுரையே” என்று சிறப்புப் பெயரிட்டுப் பலியிடும் நங்கை பரவுகின்றாள். ஆடல் - திருவிளையாடல். திருவிளையாடல் புரிந்த திருப்பதி யாது எனக் கேட்பவள், “நீர் முன் ஆடல் உறும் பதி யாது” என வினவினாள். தாம் விடை கூறவிருக்கும் பதியின் பெயரான மதுரை என்பது, “தருமதுரை” என அவள் எடுத்தோதிய பெயர்க்கண் அமைந் திருத்தலால், “முற்பகர் ஈரெழுத்தைப் பறித்தது என்றார்”. தரு என்ற ஈரெழுத்தை நீக்க நிற்பது மதுரை. மதுரை செல்வம் சேர்க்கும் சிறப்புடையதென்பது வரலாறு கண்ட உண்மையாதலால் “நிதி சேர்ந்திடும் அப்பெயர்” எனச் சிறப்பிக்கின்றார். சீன நாட்டறிஞர் குறிப்புக்கள் மதுரை நகரவர் செல்வம் சேர்க்கும் கருத்துச் சிறந்தவர் என்று கூறுகின்றன. அப் பெயர் யாது என்று கேட்டாளாதலால், அவட்குத் தருமதுரை என எமக்கு இட்டழைத்த பெயர்தான் அது என்பாராய், “நீ இட்டது எதுவோ அது” என்கின்றார்.

     திருவிளையாடற் புரிந்த இடம் யாது என்றாட்கு மதுரை என விடையிறுத்தவாறு. 

     (21)