1793. உடற்கச் சுயிரா மொற்றியுளீ
ருமது திருப்பேர் யாதென்றேன்
குடக்குச் சிவந்த பொழுதினைமுன்
கொண்ட வண்ண ராமென்றார்
விடைக்குக் கருத்தா வாநீர்தாம்
விளம்பன் மிகக்கற் றவரென்றே
னிடக்குப் புகன்றா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: பிச்சைத் தேவரை நோக்கி, ஏடீ, சேடி, உடற்கண் நிலவும் உயிர்க் குயிராகிய திருவொற்றியூரில் இருப்பவரே, உம்முடைய திருப்பெயர் யாது என வினவினேனாக, மேற்குச் சிவந்த பொழுதைக் குறிக்கும் பெயரை முற்படக்கொண்ட வண்ணர் என உரைத்தார்; அது கேட்ட யான், விடைக்குக் கருத்தாவாகிய நீவிர் உரையாடுதலில் மிகவும் கற்றவர் என்று சொன்னேன்; அவர் நீதான் இடக்குப் பேசுகிறாய் என்று உரைக்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
அச்சு - உயிர். அச்சுயிர் என்பது உயிர்க்குயிர் என்று பொருள்பட வந்தது. குடக்குச் சிவந்த பொழுது - அந்தி. அந்திவண்ணர் என்பது சிவனுடைய பெயர்களில் ஒன்று. வண்ணர் என்ற சொற்கு முற்பட நின்ற அந்தி வண்ணர் என்னுமாறு அமைவதபற்றி, “குடக்குச் சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர்” என உரைக்கின்றார். விடைக்குக் கருத்தா - எருதாய ஊர்திக்குத் தலைவர்; தொடுத்த வினாக்கட்குத் தக்க விடை கூறுவதில் தலை சிறந்தவர். விடையாகிய ஊர்திக்குத் தலைவர் என்பது பலியிடும் நங்கை கருத்து; விடையிறுத்தலில் தலைமை சான்றவர் எனப் பிச்சைத் தேவர் பொருள் கொள்கின்றார். விடை கூறலில் மிக்கவர் என்று சொல்லிவிட்டுப் பின்பு 'விடை விளம்பல் கற்றவர்' என்பது முன்னுக்குப் பின் முரணாக இருப்பது பற்றி, “இடக்குப் புகன்றாய்” என உரைக்கின்றார். தன் பேச்சினிடை நேர்ந்த முரண்பாட்டை நன்கு உணராமை தோன்ற “இதுதான் என்” எனக் கூறுகின்றாள். இடக்கு - முரண். (22)
|