1794.

     மணங்கே தகைவான் செயுமொற்றி
          வள்ள லிவரை வல்விரைவேன்
     பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன்
          பிணங்கா விடினு நென்னலென
     வணங்கே நினக்கொன் றினிற்பாதி
          யதிலோர் பாதி யாகுமிதற்
     கிணங்கேஞ் சிறிது மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி, தாழைகள் தமது மணத்தை வானளாவப் பரப்பும் திருவொற்றியூர்க்கண் வாழும் வள்ளலாகிய இவரை நோக்கி, மிகவும் விரைகின்றீரே எற்றுக்கு? சிறிது நில்லும்; யாம் பிணங்கமாட்டேம் என்றேனாக, அணங்கு போல்பவளே, நேற்றுப் போல் பிணங்காய் எனினும் இன்று நினக்கு ஒன்றினிற் பாதியிற் பாதியேனும் உளதாகும்; இதற்கு யாம் சிறிதும் இணங்கமாட்டோம் என்று கூறுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     கேதகை - தாழை; பொதுவாக நீர் நிலைகளிலும் சிறப்பாக நெய்தற் கழிக்கரைகளிலும் இக்கேதகைகள் மிக வளர்ந்து பூக்கள் நறுமணம் கமழ்வது இயற்கையாதலால், “கேதகை மணம் வான்செயும் ஒற்றி” என்று உரைக்கின்றார். கேதகை கைதை எனவும் மருவி வழங்கும். மதுரையில் வையைக் கரையிலுள்ளதொரு கைதை ஓடை, கழுதையோடை என மருவி வழங்குகிறது. மனைக்கண் நில்லாமல் தேவர் விரைந்து செல்வது கண்டு, வேண்டா, சிறிது நில்லும் என்கின்றாளாகலின், “வல்விரைவு ஏன்பிணங்கேம் சிறிது நில்லும்” என்று நங்கை சொன்னாள்; பிணக்கத்தால் தன்னை அலைத்து வருந்தினமை புலப்பட, பிச்சைத்தேவர், “அணங்கே” என்று மொழிந்து, முற்றும் பிணங்காது நேற்று அளித்தாயாயினும், இன்று அதிற் பாதியிற் பாதியேனும், அஃதாவது, காற்பகுதி யேனும் பிணக்கும் செய்வாய்; அதற்குச் சிறிதும் இசையேம் என்பாராய், “நினக்கு ஒன்றினிற் பாதி அதிலோர் பாதியாகும்; இதற்குச் சிறிதும் இணங்கேம்” என்று கூறுகின்றார்.

     நில்லாது விரைந்து வல்லே செல்வதன் கருத்துப் பிணங்கும் செயல் பற்றி; இனி அது நிகழாது என்ற குறிப்புத் தோன்றப் பலியிடும் நங்கை “வல்விரைவு ஏன் சிறிதும் பிணங்கேன், நில்லும்” என்றாள். அது கேட்ட பிச்சைத் தேவர், நேற்று முன்னர்ப் பிணங்கிப் பின்னர் இணங்கினாய்; இன்று முற்பாதி இணங்கிப் பிற்பாதி பிணங்கிப் வருத்துவாய்; இதற்கு யாம் சிறிதும் இசைய மாட்டேம் என்பாராய், “நினக்கு ஒன்றினிற் பாதி அதிலோர் பாதியாகும்; இதற்கு இணங்கேம் சிறிது என்றார்.” கூடற்கமைந்த நாழிகை ஒன்றினில் அரை நாழிகை சொல்லாட்டிற் போக்கி, எஞ்சிய அரை நாழிகையிற் பாதியைப் பிணக்கத்திற் செலுத்தி, எஞ்சிய காற்பகுதியை வீணாக்குவாய் என்பதாகும். நேற்றுப் போல் பிணங்காவிடினும் இன்று காற்பகுதி பின்னிப் பிணங்குமாதலின் “இதற்கு இணங்கேம்” என்றார் என்றும், புலவியின்றாயினும் கலவியின்றாமாதலின் இணங்கேம் என்றார் என்றுமாம்.

     (23)