1795. ஒற்றி நகரா ரிவர்தமைநீ
ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்
மற்றுன் பருவத் தொருபங்கே
மடவா யென்றார் மறைவிடையீ
திற்றென் றறிதற் கரிதென்றே
னெம்மை யறிவா ரன்றியஃ
தெற்றென் றறிவா ரென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, திருவொற்றியூர்க்கண் உறைபவராகிய இவரை நோக்கி, நீவிர் மனமுவந்து இங்கே ஏறும் ஊர்தி யாது என்று கேட்டேனாக, அவர், மடவாய், உனக்குரிய பருவத்தில், ஒருபங்கு என மொழிந்தார்; மறைந்த விடை கூறுபவரே, உமதுரை இன்னதென்று அறிதற்கரிதாய் உளது என்று சொன்னேன்; அவர் எம்மை அறிபவரன்றிப் பிறர் அஃது எத்தகையது அறிகுவார், அறியாரன்றோ என்று சொல்லுகின்றார்; இது தான் என்னையோ, எ.று.
ஏறுவது, ஊர்தி. மகளிர் வாழ்வை, வாலை, தருணை, பிரவிடை, விருத்தை என வடநூலார் நான்கு பருவமாகப் பிரிப்பர். அவற்றுள் ஒன்று பிரவிடை; அதில் பகுதி விடை. யாம் விடை என்று கூறும் பிச்சைத் தேவர், “உன் பருவத்து ஒரு பங்கே” என்றும், “நீவிர் உவந்து ஏறுவது யாது” என விழைவுவது இளமகளிர் வினாவாதல் தோன்ற, “மடவாய்” என்றும் இயம்புகின்றார். “பருவத்து ஒருபங்கு” என்பது வெளிப்பட விளங்கும் விடையன்று என்பாளாய், “மறைந்த விடையீர்” என்றதனோடு அமையாது, “இற்று என்று அறிதற்கரிது” என உரைக்கின்றாள். எனவே, எமது வினாவுக்கு நீர் தரும் விடை செவ்வியன் விடையன்று என்றாளாயிற்று. செவ்விய விடையறிவது எம்மை அறியும் சிவஞானிகட்கல்லது இயலாது என்றற்கு, “எம்மை அறிவாரன்றி அஃது எற்று என்று அறிவார்” என்று கூறுகின்றார். எமது பிரவிடைப் பருவத்து ஒரு பங்காகிய விடை என்று இயம்புகின்றீரே, மறையாகிய விடையன்றோ என்று சொல்லுகின்றாள் எனக் கொண்டு, வேதம் எமக்கு வாகனமாவதை எம்மையறிந்த சிவஞானிகள் அறிவர், பிறர் அறியார் என்பாராய், “எம்மை அறிவாரன்றி யஃது எவ்வாறறிவார்” எனத் தேவர் உரைக்கின்றார், என்றுமாம். சிவனுக்கு ஊர்தி மறை என்பதை, “மறையே நமக்கு வாகனமாம்” (பரஞ். திருவிளையாடல். உலவா.
நீவிர் ஏறுவது யாது என்றாட்கு மறை விடை கூறி அதுவும் சிவனை யறிவார் அறிவது என்றும் விடை கூறியவாறு. (24)
|