1796.

     கண்ணின் மணிபோ லிங்குநிற்குங்
          கள்வ ரிவரு ரொற்றியதாம்
     பண்ணின் மொழியாய் நின்பாலோர்
          பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
     மண்ணின் மிசையோர் பறவையதா
          வாழ்வா யென்றா ரென்னென்றே
     னெண்ணி யறிநீ யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி, கண்ணுக்கு ஒளி நல்கும் இனிய மணிபோல் இங்கே நிற்கும் கள்வராகிய இவரது ஊர் திருவொற்றியூராம்; பண்ணைப் போல் இனிமையுறும் சொற்களையுடைய பெண்ணே, நின்னிடத்து ஒரு பறவையின் பெயரைப் பெற வேண்டுகின்றேம்; அளிப்பாயாயின் மண்ணுலகில் ஒரு பறவையாய் வாழ்வாய் என்று சொல்லுகின்றார்: நீவிர் சொல்லுவது யாது என்று நான் கேட்கையில், நீயே எண்ணி அறிக என்று இயம்புகின்றார். இது என்னையோ. எ.று.

     கண்ணுக்கு ஒளி நல்குவது அதனிடத்துள்ள மணியாதலின், அதனைக் கண்ணின் மணி என்று சிறப்பிக்கின்றார். அன்புடையாரைக் கண்மணி யென்றல் தமிழ் மரபு. “கண்மணி யனையாற்குக் காட்டுக” என்றவிடத்துக் கோவலனை மாதவி கண்மணியனையானென்பது காண்க. புறத்தேயன்றி மனத்தினும் காட்சி தருதல் தோன்ற, “கள்வர்” என்றாள். பண்ணின மொழி - பண்ணிடத்து இன்னிசை போல் பேசும் மொழி.. அன்னம் என்ற பறவையை மனத்திற் கொண்டு, பிச்சைத் தேவர், “பறவைப் பெயர் வேண்டினம்” என்றார்; அன்னம், உண்ணும் சோற்றுக்கும் பெயர். படைத்தால் பறவையதாய் வாழ்வாய் என்ற விடத்துப் பறவை கிளியைக் குறிக்கும்; கிளிக்குச் சுகம் என்று பெயருண்டு. அதனை மனத்திற் கொண்டு, சுகமாய் வாழ்வாய் என வாழ்த்துவாராய், “படைத்தால் மண்ணின்மிசை ஓர் பறவையதாய் வாழ்வாய் என்கின்றார்” என வுரைக்கின்றாள். அன்னம், சுகம் என்பன எளிதிற் பொருள் விளங்க நில்லாமை பற்றி “எண்ணி அறி நீ என்கின்றார்” என்று கூறுகின்றாள்.

     அன்னம் வேண்டினம்; படைத்தால் நீ சுகமாய் வாழ்வாய் என வாழ்த்தியவாறு.

     (25)