1797. சேடார் வளஞ்சூ ழொற்றிநகர்
செல்வப் பெருமா னிவர்தமைநா
னோடார் கரத்தீ ரெண்டோள்க
ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
கோடா கோடி முகநூறு
கோடா கோடிக் களமென்னே
யீடா யுடையா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, பெருமை சான்ற வளம் சூழ்ந்த திருவொற்றியூர்க்கண் உறையும் செல்வப் பெருமானாகிய இவரை நோக்கி, திருவோடு ஏந்திய கையும் எட்டாகிய தோள்களையும் உடையீரே, என்னையோ என்று வினவினேனாக, கோடா கோடி முகமும் நூறு கோடாகோடி கழுத்தும் ஈடாகக் கொண்டுள்ளாயே, இஃது என்னையோ என்று கேட்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
சேடு - பெருமை, பெருமை கேது வளம் பலவும் சூழ்ந்திருத்தல். இவ்வாற்றால், திருவொற்றியூர், “சேடார் வளஞ்சூழ் ஒற்றிநகர்” எனப்படுகிறது. அருட் செல்வத்தால் பெருமை மிக்கவனாதல் பற்றி, “செல்வப் பெருமான்” என்று சிறப்பிக்கின்றார். கோடி கோடி, பதுமம்; பதுமம் நூறு கொண்டது சங்கம். வினவிய நங்கைக்கு பதுமத்துக்கு ஈடாக முகமும், சங்குக்கு ஈடாக களமும் கொண்டிருக்கின்றாய்; இதற்கு என் சொல்வது என்று பிச்சைத் தேவர் கூறினாராம். (26)
|