1798.

     துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித்
          தோன்றா லிங்கு நீர்வந்த
     கருமஞ் சொலுமென் றேனிவண்யாங்
          கடாதற் குன்பா லெம்முடைமைத்
     தருமம் பெறக்கண் டாமென்றார்
          தருவ லிருந்தா லென்றேனில்
     லிருமந் தரமோ வென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி. நன்மரங்கள் செழித்து வளரும் பொழில்களை யுடைய திருவொற்றியூர்க்கண் உறையும் தலைமகனே, இவ்விடத்துக்கு நீவிர் வந்த செய்தி யாதாம் சொல்லுக என்று கேட்டேனாக, இவ்விடத்தில் வினவ வந்தது உன்பால், எமது உடைமையாகிய தருமம் இடம் பெறக் கண்டேம் என்று சொன்னார்; இருந்தால் தருவேன் என்று நான் சொன்னதற்கு, நின் வீடு என்ன பெரிய மந்தர மலையோ என்று கூறுகின்றார்; இது தான் என்னையோ. எ.று.

     துருமம் - கோங்கு, கற்பகம் முதலிய பெரு மரவகையைக் குறிக்கும். பெரிய மரங்கள் தழைத்திருக்கும் சோலை சூழ்ந்ததென்றற்குத் “துருமம் செழிக்கும் பொழில்” என வுரைக்கின்றார். தோன்றல் - தலைமைப்பண்பு தோன்ற விளங்கும் ஆண்மகன். கருமம் - செய்பொருள். கடாதல் - வினவுதல். தருமம் என்பது சிவனது ஊர்தியாகிய காளையைக் குறிப்பது. அதனைத் தரும விடை, அறவிடை யென்றும் கூறுவர். அக்குறிப்புத் தோன்றவே, யாம் கடாதற்கு உன்பால் எம் உடைமைத் தருமம் (நடை) பெறக் கண்டாம் என்று கூறுகின்றார். தரும விடை காளையாதலால் அதனைக் கடாவ (செலுத்த) வந்தேம் என்பது. தருமம் என்றது தரப்படும் நீர், பால் என்ற அமுத வகையைக் குறிப்பதாகக் கொண்டு, இருந்தால் தருவேன் என்பாளாய், “தருவல் இருந்தால்” என்று சொல்லுகிறாள். தருவல் என்பதற்கு, உன் இல்லம் என்ன பெரிய மந்தரமலையா கடைந்து அமுதெடுத் தருதற்கு என்பார் போல் “இல் இருமந்தரமோ” என்கின்றார். “நில் இருமந்தரமோ” என்பதற்கு சிறிது நில், மார்பு இரண்டும் அமுதம் கடைந்து தரும் மந்தர மலையோ, காண்போம் என்கின்றார் எனப் பொருள் கொள்ளுதலும் உண்டு; இல் இரு மந்தரமோ என்று கொண்டு, இல்லின்கண் இரு; மார்பு மந்தரமோ என்று காண்போம் என்றலும் ஒன்று.

     (27)