1799.

     ஒருகை முகத்தோர்க் கையரெனு
          மொற்றித் தேவ ரிவர்தமைநான்
     வருகை யுவந்தீ ரென்றனைநீர்
          மருவி யணைதல் வேண்டுமென்றேன்
     றருகை யுடனே யகங்காரந்
          தனையெம் மடியார் தமைமயக்கை
     யிருகை வளைசிந் தென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி, ஒருகை பொருந்திய முகத்தையுடைய விநாயகர்க்குத் தந்தை எனப்படும் திருவொற்றியூர்ப் பிச்சைத் தேவராகிய இவரை, நான் வரவேற்று எம்மனைக்கு மகிழ்வுடன் வருகை புரிந்த தாங்கள் என்னைக் கலந்து அணைதல் வேண்டுமென உரைத்தேன்; அது கேட்டு தருகையுடன் அகங்காரத்தையும் எம்முடைய அடியார்களையும் மனமயக்கத்தையும், முறையே இருகை வளை சிந்து என்று கூறுகின்றார். இதுதான் என்னையோ. எ.று.

     முகத்தில் கை பொருந்தியது யானையாதலால், ஒருகை முகத்தோர் என்றது யானை முகத்தையுடைய விநாயகரை யாயிற்று. சிவனும் உமாதேவியும் களிறும் பிடியுமாகிக் கலந்து அடியவர்க்குண்டாகும் இடர்கெடுத்தற் பொருட்டு அளித்தனர் எனத் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆதலால், சிவனை அவர்க்குத் தந்தை என்பாராய், “ஒருகை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றித் தேவர்” எனப் பலியிடும் நங்கை குறிக்கின்றாள். பலி பெறும் பொருட்டு மனைக்கு மகிழ்வுடன் வந்தமை கண்டு வரவேற்பவள், “வருகை உவந்தீர்” என்று சொல்லி, பலியேற்பது, “மனமுலாம் அடியார்க்கு அருள் புரிகின்ற வகை” (ஞானசம். இலம்பை) என்று சான்றோர் உரைத்தலால், தன்னைக்கலந்து அருள வேண்டுமென்பாளாய், “என்றனை நீர் மருவியணைதல் வேண்டும்” என்று கேட்பாளாயினள். அவட்கு விடைகூறும் பிச்சைத் தேவர், ஈகைச் செயலில் மனத்துள்ள அகங்காரத்தை, எம்முடைய அடியார்களை, அறிவிற் படிந்துள்ள மயக்குணர்வை முறையே இருகைவளை சிந்து என்று உரைக்கின்றார், என்றது ஈகைச் செயலில் இரு, அகங்காரத்தைக் கை, அடியார்களை வளை, மயக்குணர்வைச் சிந்து என்று சொல்லியவாறாம். கைத்தல் - வெறுத்தல்; வளை - அன்பால் பணி செய்து வளைத்தல்; சிந்துதல் - கெடுத்தல்.

     'சிவபோகம் அருள வேண்டும்' என்றாட்கு அகந்தையால் விளையும் மயக்கவுணர்வைப் போக்கி ஈகை விளைக்கண் நின்று அடியார்க்குத் தொண்டால் அன்பு செய்தல் வேண்டுமென அறிவுறுத்தியவாறு.

     இருகை வளை சிந்து என்றது, சிற்றின்ப நுகர்ச்சிக்கண் உளதாகும் தகுதிப் பாட்டினைத் துறந்தொழிக என்பது குறித்தது.

     (28)