1800. திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ்
தேவ ரேயிங் கெதுவேண்டி
வருத்த மலர்க்கா லுறநடந்து
வந்தீ ரென்றேன் மாதேநீ
யருத்தந் தெளிந்தே நிருவாண
மாகவுன்ற னகத்தருட்க
ணிருத்த வடைந்தே மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, திருந்திய நிலையால் சிறப்பு மிகும் திருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, இவ்விடத்தில் யாதினை விரும்பிப் பூப்போலும் திருவடிகள் வருத்தமுற நடந்து வந்தீர் என்று கேட்டேனாக, பெண்ணே, எனது வருகையின் உட்பொருளைத் தெரிந்துணர்ந்து நீ நிருவாணம் எய்தவும், உன்னுடைய மனத்தின்கண் அருட்பார்வை பதியவும் வந்தடைந்தேம் என வுரைக்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
திருக்கோயில் நிலையும் மக்கள் உறையும் தெருக்களும் போக்குவரவு வாய்ப்புகளும் காலந்தோறும் திருந்திச் சிறப்பு மிகுவது பற்றி, “திருத்த மிகுஞ்சீர் ஒற்றி” என்று தெரிவிக்கின்றார். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே சோழவேந்தர் வந்திருந்து விழா நடத்தும் வீறும், கல்வியும் இசையும் கூத்தும் திருத்தமுறப் பேணப்பட்ட சிறப்பு இவ்வூர்க் குண்டென்பதை இங்குள்ள பழைய கல்வெட்டுக்கள் எடுத்துரைப்பது, இத் திருத்தமிகும் சீர்க்குச் சான்று பகரும். மலர்க்கால் வருத்தமுற நடந்து என இயைக்க, மலர்க்கால் - தாமரை மலர் போன்ற அடி. அருத்தல், ஈண்டுக் கருத்துப் பொருள் மேற்று. பலிவேண்டி வருதல், பக்குவமுற்ற மக்கட்கு ஞானம் நல்குதற் பொருட்டு இறைவன் எழுந்தருளுதல். நிருவாணம் எய்துதல் - பற்றறுதல். அருட்கண் இருத்தல், சத்திநிபாதம் வருவித்து ஞான நாட்டம் கொள்வித்தல். நின்பாற் பெறலாகும் இன்பம் பொருளாக வந்துளேன் என்ற கருத்தறிந்து இசைந்து நீ, உடுத்த ஆடை களைந்து கூடற்குச் சமையவும், உன் மனத்தின்கண் எம்பால் மிக்க ஆசைப் பார்வை யுண்டாகவும் அடைந்தேம் என்றொரு பொருள் தோன்ற நிற்பது காண்க. நிருவாணம் - ஆடையில்லாத நிலை. நிருவாண நிலைபெற்ற சமண முனிவர், ஆடையின்றித் திரிந்தமை கண்ட தமிழர், ஆடையொன்றும் இல்லாத கோலத்தை அமணக் கோலம் என்றனர். அதுபின் நிருவாணத்துக்காகி, நிருவாணம் ஆடையற்ற அமண்கோலம் என்று பொருள் வழங்குவதாயிற்று.
எது வேண்டி வந்தீர் என்றாட்கு, நீ நிருவாணமாகவும் அருட்கண் இருத்தவும் வந்தேம் என விடையிறுத்தவாறாம் என்க. (29)
|