1801.

     வளஞ்சே ரொற்றி மாணிக்க
          வண்ண ராகு மிவர்தமைநான்
     குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண்
          கோலச் சடையீ ரழகிதென்றேன்
     களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண்
          காண வோரைந் துனக்கழகீ
     திளஞ்சேல் விழியா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; வளமிக்க திருவொற்றியூரில் உறையும் மாணிக்கமணியின் நிறத்தையுடையராகிய இவரைப் பார்த்து, ஐயனே, உமக்கு ஒருகண் நெற்றியில் உளது; அழகிய சடையையுடையவராகிய உமக்கு அது அழகு தருகிறது என்று சொன்னேன்; இளஞ் சேல்மீன் போன்ற கண்ணை யுடையவளே, இடம் அமைந்த நெற்றியிலுள்ள ஒரு கண்ணினும் எழுச்சியையுடைய நின் முலையிற் கண் அஞ்சு உள்ளன; உனக்கு இவ்வாறிருப்பது அழகாக இருக்கிறது என்று உரைக்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     நெய்தல் நிலத்து நகரமாயினும் ஒற்றியூர் மருத வளமும் முல்லை வளமும் சேர்ந்திருப்பது பற்றி “வளஞ்சேர் ஒற்றி” எனப் பொதுப்பட மொழிகின்றார். சிவந்த ஒளி திகழும் மேனியராதலால், ஒற்றியூர்ச் சிவனை “மாணிக்க வண்ணர்” என்று பலியிடும் நங்கை கூறுகின்றாள். குளம் - நெற்றி,. கோலச் சடை - அழகிய சடை. அழகிது என்றது வஞ்சப் புகழ்ச்சி போறல் கண்டு, கண்ணொன்று இருத்தற்கு ஏற்ற இடம் என் நுதலில் உண்டாதலால் அழகு விளங்கித் தோன்றுகிறது என்று கூறுவாராய், “களஞ்சேர் குளம்” என்று புகன்று, என் நெற்றியில் ஒரு கண்ணேயுளது; நின் முலைகளில் இருக்கும் கண்கள் பார்த்தற்கு அஞ்சுதகப் பலவாய் உள்ளன காண் என்பாராய், “எழில் முலைக்கண் காண ஓர் ஐந்து உள்ளன” என்று உரைக்கின்றார். உடலியலறிஞர் முலையிற்கண் பதினைந்து முதல் இருபது எனச் சொல்லுகின்றார்கள். காண்பதற்கு மிகவும் நுண்ணியவாய் அஞ்சுதக்களவாய் இருத்தல்பற்றி, “காண ஓர் ஐந்து” என்கின்றார். ஐந்து - அஞ்சு. நிமிர்ந்து இறுமாந்திருப்பது பற்றி “எழில்முலை” என்பது பொருந்துவதாகும். எழில் - எழுச்சி; “எழில் - நலம்” (குறள்) என்றவிடத்துப் பரிமேலழகர் இப்பொருளே கூறுகின்றார். சேல் - ஒருவகை மீன்.

     நெற்றியில் ஒரு கண்ணுடைமை உமக்கு அழகிது என்றாட்கு, நீ முலையில் பல கண்ணுடைமை அழகிது என்றார் என்க.

     (30)