1802.

     பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர்
          பதிவே றுண்டோ நுமக்கென்றே
     னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா
          ருண்டோ நீண்ட மலையென்றேன்
     வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த
          மலைகா ணதனின் மம்முதல்சென்
     றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; பயன்கள் பலவுடைய திருவொற்றியூரை யுடையவரே, உமக்கு இதனின் வேறு இடமுண்டோ என்று வினவினேனாக, வலிமை கொண்ட வெள்ளிமலை என்று இவர் விடை கூறினார். இதனின் நெடிய மலையுண்டோ என யான் மீளவும் கேட்டேன்; வலிமை கொண்ட ஓசையுடைய தகரத்தை இடையிலே வருவிக்கப் பெற்ற மலையுண்டு காண் என்று மொழிந்து, அதன் முதலெழுத்தாகிய மகரம் நீங்க நின்ற பெயருடன் இலமென்பதன் பெயர் சேர வருவதும் உண்டென்று சொன்னார்; இது தான் என்னையோ. எ.று.

     பலம் - பயன். பதி - உறையுமிடம். உலம் - வலிமை; திரட்சியுமாம். வெண்பொன் - வெள்ளி; இரும்பைக கரும்பொன் எனவும், வெள்ளியை வெண்பொன் எனவும், தூய பொன்னைச் செம்பொன் எனவும் வழங்குவர். வெண்மலை பொன்மலை என்று பிரித்துப் பனிமலையென்றும் பொன்மலையென்றும் கூறவனவுண்டு; அவையும் சிவனுக்குரிய பதிகள் என அறிக. வெண்பொன்மலை, வெண்மலை, பொன்மலை என்பன கூறக் கேட்டவள், இவற்றின் நீண்ட மலையுண்டோ என வினவினாள்; நீண்ட மலை என்றதை, மாலையென்று கொண்டு, கொன்றை மாலையைக் குறிக்கும் மதலை என்ற சொல்லை விடையாக இறுப்பவராய், “இடைத்தவ் வருவித்த மலை” என்று சொல்லுகின்றார். மலை என்ற சொல்லின் இடையே 'த' என்ற எழுத்தை வருவிக்க மதலையாதல் காண்க. மதலை என்பது மகனையும் குறித்தலால், மகனான விநாயகரைக் குறிப்பாகக் கொண்டு, அவர்க்குக் கைம்மலை, மதமலை எனப் பெயர் பல நீட்டிக் கூறினார் என்றலும் ஒன்று; மேலும் தொடர்ந்து நீட்டுவாராய், மாலை யாவது கொன்றையே யன்றித் தலைமாலையும் உண்டென்றற் பொருட்டு, மதலைச் சொல்லின் முதலெழுத்தாகிய மகரத்தைக் குறைத்து, நின்ற தலை என்பதன் முன் இலம் என்ற சொல்லின் பரியாயமான தாமம் என்பதைப் பெய்து கொள்க என்ற பொருள்பட, “அதனின் மம் முதல் சென்று இலஞ்சேர்ந் ததுவும் ஆம்” என்கின்றார். தலைத் தாமம் - தலை மாலை.

     நீண்ட மாலையுண்டோ என்றாட்குக் கொன்றையும் தலைமாலையும் உண்டேன விடை கூறினாராயிற்று.

     (31)