1803.

     வயலா ரொற்றி வாணரிவர்
          வந்தார் நின்றார் வாய்திறவார்
     செயலார் விரல்கண் முடக்கியடி
          சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார்
     மயலா ருளத்தோ டென்னென்றேன்
          மறித்தோர் விரலா லென்னுடைய
     வியலார் வடிவிற் சுட்டுகின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; வயல்கள் பொருந்திய திருவொற்றியூர்க்கண் வாழ்பவராகிய இவர், நம் மனைக்கு வந்து வாய் திறவாமல் நின்றார்; செய்கை கட்குரிய கைவிரல்களின் சுண்டுவிரல் மோதிரவிரல் இரண்டையும் முடக்கி அங்கைக்குள் சேர்த்து எஞ்சிய இருவிரல்களை நிமிர்த்து விரிவித்தார்; மயங்கிய கருத்தோடு நான் என்னை என்று கேட்டேன்; மறுபடியும் ஒரு விரலால் இயன்று வளரும் என் உடம்பைச் சுட்டிக் காட்டுகின்றார்; இது தான் என்னையோ. எ.று.

     நீர்வளமும் ஊர் அருகே நன்செய் வயலும் பொருந்தியனவே ஊர் என்ற பெயர் பெறும்; திருவொற்றியூர் ஆதலால் நன்செய் வயல் நன்குண்மை புலப்படுதலால், “வயலார் ஒற்றி” என உரைக்கின்றாள். வாழ்நர், வாணர் என வந்தது. பலி வேண்டி வந்தவர் வாய் திறவா நின்றார் என மாறுக. திறவார் : முற்றெச்சம். கை செய்யும் செயல்வகை அனைத்திற்கும் விரல்கள் உரிய வையாதலால் “செயலார் விரல்கள்” என்று சிறப்பிக்கின்றாள் பலியிடும் நங்கை. சுண்டுவிரல் மோதிரவிரல் இரண்டையும் மடக்கி ஏனை மூன்றையும் தாமரை போல விரித்துக் காட்டினரேயன்றி வாய் திறந்து ஒன்றும் கூறாமையின், “வந்தார் நின்றார் வாய் திறவார்” என்றும், “செயலார் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார்” என்றும் சொல்லி, இன்னது கேட்கின்றார் என்பது விளங்காமை புலப்பட, “மயலார் உளத்தோடு என் என்றேன்” என்றும் சொல்லுகின்றாள். தாமரை மலர்போல் விரல்களை விரித்துக் காட்டியது ஓதனமாகிய சோற்றுத் திரளையும், நங்கையின் முலையையும் குறித்தல் அறிக. மறித்தல் - மீளவும் செய்தல். பருவம் எய்தும்போது தானாக இயன்று எழுவது மார்பில் முலைக்கு இயற்கை யாதலால், அதனை “இயலார் வடிவு” என்று சிறப்பிக்கின்றார்.

     வேண்டுவது என் என்றாட்குத் தனம் வேண்டுமெனச் சுட்டிக்காட்டியவாறு.

     (32)