1804.

     பேர்வா ழொற்றி வாணரிவர்
          பேசா மௌன யோகியராய்ச்
     சீர்வாழ் நமது மனையினிடைச்
          சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே
     னோர்வா ழடியுங் குழலணியு
          மொருநல் விரலாற் சுட்டியுந்தம்
     மேர்வா ழொருகை பார்க்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; புகழ் நிலவும் திருவொற்றியூரில் வாழ்பவராகிய இப் பிச்சைத் தேவர் வாய் பேசாத மவுனவிரதமும் யோகமும் உடையராய்ச் சிறப்புறும் நம்முடைய மனைக்குப் போந்தாராக, விருப்பம் யாது சொல்லுமின் என்று கேட்டேன்; அவர் கைவிரலால் தமது அடியையும், யான் கூந்தலில் அணிந்த சில்லென்ற அணியையும் சுட்டிக் காட்டித் தமது கையை விரித்துப் பார்க்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     பேர் - புகழ். என்றும் பொன்றாது வாழ்வது புகழல்ல தில்லை என அறிக. பேசா மௌனம் - பேசாமையாகிய விரதம். குறித்த தொன்றின் கண் ஒன்றிய உணர்வும் செய்கையு முடையவர் யோகியர். இரண்டும் உடையராய்ச் சேர்ந்தமை பற்றிப் “பேசாமௌன யோகியராய்ச் சேர்ந்தார்” என்று கூறுகின்றாள். சேடியை உளப்படுத்தியுரைத்தல் தோன்ற “நமது மனையினிடைச் சேர்ந்தார்” என இசைக்கின்றாள். விழைவு - விழைவது. தென்முகக் குருபரனாய் ஞானநூல் வல்லார் நால்வர்க்கு ஞான நுண் பொருளைச் சின் முத்திரையாற் காட்டிய நன்மை யுடைமை பற்றி “நல்விரல்” என்று சிறப்பித்து, விழைவது அடிசில் என்பது புலப்பட, தமது காலடியைக் காட்ட, அவள் வணங்கி எழக்கண்டு கூந்தலில் அணிந்திருந்த சில் என்ற அணியைக் காட்டினமையின், அவள், நிற்றலை நோக்கி அடியும் சில்லும் கூட்ட வரும் அடிசிலை தமது கையில் தர வேண்டும் என்பாராய், “அடியும், குழலணியும் ஒரு நல்விரலால் சுட்டியும், தமது ஒரு கையையும் பார்க்கின்றார்” என்று சொல்லுகின்றாள். தன் கீழ் வீழ்ந்து வணங்கினார்க்கு நல்வாழ்வு தரும் அடியாதலால், “ஓர் வாழ் அடி” எனவும், அபயமளிக்கும் திருக்கை என்றற்கு “ஏர்வாழ் ஒருகை” எனவும் சிறப்பிக்கின்றார். நிமிர்த்த வலக்கை, ஏர்வாழ் கையென அறிக. காட்டக் கண்டு வணங்குதல் செய்ததன்றிக் கருத்தை ஆராயாமை புலப்பட, “இது தான் என்?” என்றாள். சில்லென்னும் கூந்தலணி; பெண்கள் தலையுச்சியிற் கோத்தணியும் சில்லை; உச்சியில் சில்லையும், அதன்கீழ் நாகவில்லையும் அணிவது பழைய நாள் வழக்கு.

     விழைவு என் என்றாட்குப் பேசா மவுனத்தால் அடிசில் கையில் தர வேண்டும் என்று கையாலும் கண்ணாலும் காட்டினாராம் என்பது.

     (33)