1805.

     பெருஞ்சீ ரொற்றி வாணரிவர்
          பேசா மௌனம் பிடித்திங்கே
     விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு
          மேலு நோக்கி விரைந்தார்யான்
     வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை
          வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
     ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; பெரிய சீர்கொண்ட திருவொற்றியூரில் வாழ்பவராகிய இவர் பேசா மவுன விரதம் மேற்கொண்டு இங்கே வந்து கண்மலர்கள் விரித்து காணப்பட்டாரை ஈர்த்துப் பிணிக்க நின்றதனோடு அமையாமல், என்னை அடி முதல் உச்சிவரை பார்த்துவிட்டுச் செல்ல விரைந்தார்; அவரை நிறுத்தி, பெருகி வரும் சிறப்புடையவரே, மணி போன்ற சொற்களால் வேண்டுவதைத் தெளிய வுரைமின் என்றேனாக, என் மார்பிடைக் கிடக்கும் மாலையாகக் கோக்கப்பட்டுள்ள பெரிய சிறப்புடைய மணிகளைக் காட்டுகின்றார்; இது தான் என்னையோ. எ.று.

     பல்வகை வளங்களால் சீர்மிக்குற்ற ஊர் என்றற்குப் “பெருஞ்சீர் ஒற்றி” என்று சிறப்பிக்கின்றார். பேசாமவுனம் - பேசாமையாகிய மவுன விரதம். இழுக்காவாறு மேற்கொண்டிருப்பது தோன்ற, “பிடித்து” என்றும், கண்ட யான் அவர் காட்சி வலைப்பட்டு இடம் பெயராவாறு என்னை நோக்கி நின்றார் என்பாள், “விரிஞ்சு ஈர்தர நின்று” என்றும் கூறினாள். விரிந்து என்பது எதுகை நோக்கி விரிஞ்சு என வந்தது. ஈர்த்தல் - இழுத்தல். அடிசில் வேண்டும் என்ற குறிப்பை அவளுடைய அடி முடி நோக்கிக் காட்டினார்; அக் குறிப்புணராமல் அவள் நின்ற மையின் செல்லலுற்றாராதலின், “விரைந்தார்” என விளம்புகின்றாள். மணி வார்த்தை வகுக்க என்றேனாதலின், மணி யெனவும் வார்த்தை யெனவும் வகுத்து, மவுனம் பிடித்தமையின் வார்த்தை எம்பால் இல்லை, மணிஉன் மார்பின்கண் உளதுகாண் என்பாராய்; “மார்பிடைக் காழ் இருஞ்சீர் மணியைக் காட்டுகின்றார்” எனச் சொல்லுகின்றாள். காழ் - கோவை.

     அடிசில் வேண்டு மென்று கட்பார்வையாற் குறித்ததுணராமை கண்டு விரைந்து சென்றாரை நோக்கி மணிவார்த்தை வகுக்க என்று வினாவினாட்கு, வார்த்தையில்லை, மணி நின்மார்பிடையுளது எனக் காட்டினார் என்றவாறு.

     (34)